எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதை கண்டு பாஜக எரிச்சல் அடைந்துள்ளது; அதன் வெளிப்பாடே அமலாக்கத்துறை சோதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயற்சி:

இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. எதிர்க்கட்சி கூட்டத்தை திசைத்திருப்பும் பாஜகவின் தந்திரமே சோதனை. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜக எரிச்சலடைந்திருப்பதால் அமலாக்கத்துறை ரெய்டு:

பாஜக ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எரிச்சலடைந்திருந்ததன் வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை என்று முதல்வர் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை சோதனை பற்றி சிறிதும் கவலை இல்லை:

அமலாக்கத்துறை சோதனை பற்றி கிஞ்சித்தும் திமுக கவலைப்படவில்லை. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. தன் மீதான வழக்குகள், சோதனைகள், குற்றச்சாட்டை அமைச்சர் பொன்முடி சட்டரீதியாக எதிர்கொள்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியாவை ஆபத்தில் இருந்து மீட்கவே கூட்டம்:

இந்தியாவுக்கே ஆபத்து வந்திருக்கிறது; அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றவே கூட்டம் நடைபெறுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2024 தேர்தலில் பாஜகவுக்கு பதில் தர மக்கள் தயார்:

அமலாக்கப்பிரிவு சோதனைகளுக்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பதில் தர இருக்கிறார்கள். பாஜகவின் தந்திரங்களையெல்லாம் சமாளிக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வடமாநிலங்களில் பின்பற்றிய உத்தியை தற்போது தமிழ்நாட்டில் பாஜக பயன்படுத்தி வருகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தால் பாஜக எரிச்சல் அடைந்து அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆளுநர் எங்களுக்காக பரப்புரை செய்கிறார்:

எங்களுக்காக ஆளுநர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் நடத்தி வருகிறது. பாஜக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும். அமலாக்கத்துறை சோதனை திசைதிருப்புவதற்காக நடத்தப்படுகிறது, இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

காவிரி பிரச்சனையில் ஒரே நிலைப்பாடுதான்:

மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம் எனும் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டமே நடைபெறுகிறது; காவிரி பிரச்னை தொடர்பான கூட்டம் இல்லை என்றார்.

The post எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதை கண்டு பாஜக எரிச்சல் அடைந்துள்ளது; அதன் வெளிப்பாடே அமலாக்கத்துறை சோதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: