×

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.க்கு தகவல் கூறியதால் எத்தனை போர் விமானங்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது: ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததால், இந்திய ராணுவம் எத்தனை போர் விமானங்களை இழந்துள்ளது?’ என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை குறிவைத்து ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது கடந்த 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் ராகுல் காந்தி, ‘‘இது ஒரு குற்றம். இதை இந்திய அரசு செய்தது என வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். யார் இதை அங்கீகரித்தது? இதனால் நமது விமானப்படைகள் எத்தனை விமானங்களை இழந்தன?’’ என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கிய பிறகு ஆரம்பகட்டத்தில் பாகிஸ்தான் எச்சரித்தோம். ஆபரேஷன் தொடங்குவதற்கு முன்பு அல்ல. எனவே இந்த விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது’ என கூறியிருந்தது. ஆனால் அமைச்சர் ஜெய்சங்கர் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் ஜெய்சங்கரை குறிவைத்து விடுத்துள்ள எக்ஸ் பதிவில், ‘‘அமைச்சர் ஜெய்சங்கர் தனது மவுனத்தின் மூலம் தவறை ஒப்புக் கொள்கிறாரா? இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே நான் மீண்டும் கேட்கிறேன்? பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்ததால் இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது?’’ என கேட்டுள்ளார்.

காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவின் தலைவன் பவன் கேரா நேற்று தனது பேட்டியில் கூறியதாவது: வெளியுறவு அமைச்சரின் பேச்சு குறித்து ராகுல் காந்தி சில கேள்விகளை கேட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளில் மீண்டும் மீண்டும் கூறி வருவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. வெளியுறவு அமைச்சரின் பேச்சு முக்கியமானது. ஏனெனில் தீவிரவாதிகள் தங்கள் மறைவிடங்களிலிருந்து தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

எனவே இது ஏன் செய்யப்பட்டது என்பது குறித்து பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் பதிலளிக்க வேண்டும். நாடு எத்தனை விமானங்களை இழந்தது? நாடு என்ன இழப்புகளைச் சந்தித்தது? எத்தனை தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்கள்? என்ற கேள்விகளுக்கும் பதில் வேண்டும். இது ராஜதந்திரம் அல்ல. வெளியுறவு அமைச்சர் பேசியதை அனைவரும் கேட்டோம். ஆனால் இப்போது மறைக்கப்படுகிறது. ஜெய்சங்கர் கூறிய தகவலால் தான் மசூத் அசார், ஹபீஸ் சயீத் உயிர் தப்பியிருக்கிறார்கள். நாடு இதை தெரிந்து கொள்ள உரிமை இல்லையா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

* இது பாகிஸ்தான் மொழி
ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘‘ராகுல் காந்தி தனது கடந்த கால தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. எத்தனை போர் விமானங்களை இழந்தது என கேள்வி எழுப்புவதன் மூலம் அவர் நாட்டின் ராணுவத்தை அவமதிக்கிறார். விமானப்படையும், வெளியுறவு துறையும் எந்த இழப்பும் இந்தியாவுக்கு ஏற்படவில்லை என உறுதிபடுத்திய பிறகும் இவ்வாறு கேள்வி கேட்டுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தை ராகுல் தவறாக மேற்கோள் காட்டுகிறார். தேசத்தை ஆதரிப்பதில் காங்கிரஸ் உண்மையிலேயே தீவிரமாக உள்ளதா? அவர்களின் நடவடிக்கை வேறுமாதிரியாக இருக்கின்றன’’ என்றார். பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ‘‘ராகுல் காந்தி பாகிஸ்தான் மொழியில் பேசுகிறார். அவரது கருத்துக்கள் பாகிஸ்தானின் பிரசாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளன. ராகுலின் அறியாமை தற்செயலானது அல்ல ஆபத்தானது’’ என்றார்.

The post ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாக்.க்கு தகவல் கூறியதால் எத்தனை போர் விமானங்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது: ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Pakistan ,Operation Sindh ,Rahul Gandhi ,Jaishankar ,New Delhi ,External Affairs Minister ,Pakistan… ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை