நீலகிரியில் பெய்து வரக்கூடிய மழை காரணமாக தற்போது காப்பி விளைச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஊட்டி அருகே சிங்காரா மற்றும் கோத்தகிரி, குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள காப்பி தோட்டங்களில் உள்ள செடிகளில் பூக்கள் பூத்தும், பல செடிகளில் காப்பி காய்கள் காய்த்தும் குலுங்குகின்றன.
இதேபோல், மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகள் சன்னிசைடு, கிளிஞ்சடா, கரும்பாலம், கோடேரி போன்ற பகுதிகளில் ஊடு பயிராக பயிரிட்டுள்ள காபி செடிகளிலும் காய்த்து குலுங்குகின்றன. ஓரிரு மாதங்களில் காப்பி கொட்டைகள் நன்கு விளைந்து கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் காய்த்து குலுங்கும். இவை, நன்கு விளைந்த உடன் அவற்றை பறித்து தோல் நீக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, காப்பி தூள் தயாரிக்கும் அளவிற்கு பக்குவப்படுத்தி சேமித்து வைக்கப்படும்.
இதனை ஊட்டி, குன்னூர் மற்றும் சமவெளி பகுதிகளில் காப்பி தூள் தயாரிக்கும் சிறிய கடைகள், நிறுவனங்களில் இருந்து விளையும் இடத்திற்கே வந்து நல்ல விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் ஓரளவிற்கு நிலையான வருவாய் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
The post ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் காபி விளைச்சல் துவக்கம் appeared first on Dinakaran.