பயிற்சியில் மானு பேக்கர்: பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை மானு பேக்கர், போட்டி தொடங்கும் முன்பாக இலக்கை நோக்கி குறி வைத்து தீவிரமாக பயிற்சி செய்கிறார்.
* ஒலிம்பிக்சில் பங்கேற்கும் 14 வயது இந்திய சிறுமி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஃபிரீஸ்டைல் நீச்சல் பிரிவில், இந்தியா சார்பில் களமிறங்குகிறார் பெங்களூருவை சேர்ந்த 14 வயது சிறுமி தினிதி தேசிங்கு. பல்கலை. ஒதுக்கீட்டு இடம் மூலமாக வாய்ப்பு பெற்றுள்ள தினிதி, நடப்பு தொடருக்கான இந்திய குழுவில் இடம் பெற்றுள்ள மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 9ம் வகுப்பு மாணவியான இவர், முன்னதாக 2022, குவாங்ஸூ ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் களமிறங்கிய இளம் வீராங்கனை என்ற சாதனை ஆர்த்தி சாஹா வசம் உள்ளது (11 வயது, 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்ஸ்). பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்கும் மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமை சீனாவின் ஸெங் ஹவோஹவோவுக்கு (11 வயது, ஸ்கேட்போர்டிங்) கிடைத்துள்ளது.
* விஷ்ணு சரவணன் உற்சாகம்
பாரிஸ் ஒலிம்பிக் படகு போட்டியில் பங்கேற்கும் வேலூர் வீரர் விஷ்ணு சரவணன், நேற்று தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு, ‘எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு நல்வாழ்த்துக்கள்’ என தகவல் பதிந்துள்ளார்.
* பி.டி.உஷாவுடன் அனுஷ்
ஒலிம்பிக் போட்டியின் குதிரையேற்றம் தனிநபர் டிரெஸ்ஸேஜ் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை அனுஷ் அகர்வல்லாவுக்கு (24 வயது, கொல்கத்தா) கிடைத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர் சர் கேரமெல்லோ ஓல்டு என்ற தனது குதிரையுடன் பதக்க வேட்டையில் இறங்குகிறார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றில் பங்கேற்பதற்காக அனுஷ் வாங்கிய குதிரை இது. இதற்கு முன் 7 இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்சில் களமிறங்கி இருந்தாலும், அவர்கள் அனைவரும் குழு போட்டியில் மட்டுமே பங்கேற்றிருந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் அனுஷ்.
* மன உறுதிக்கு கவுரவம்!
பிரான்ஸ் டென்னிஸ் வீரர் கெவின் பியட், 11 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் இடுப்புக்கு கீழே முழுவதுமாக செயலிழந்து படுத்த படுக்கையானார். எனினும், மன உறுதியுடன் போராடிய அவர் தற்போது சக்கரநாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அவரது மன உறுதியை கவுரவிக்கும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான சுடர் ஓட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ‘ரோபோ’ தொழில்நுட்பத்துடன் நடக்க உதவும் நவீன கருவியை அணிந்தபடி ஒலிம்பிக் டார்ச்சை ஏந்தி கெவின் பியட் நடைபோட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
The post ஒலிம்பிக் திருவிழா appeared first on Dinakaran.