×

ஆஷஸ் 3வது டெஸ்டில் விறுவிறுப்பு: தேவை நான்கே விக்கெட்டு கிடைச்சா இங்கி கெட்டவுட்டு; தொடரை கைப்பற்ற ஆஸி தீவிரம்

அடிலெய்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 3வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. முதல் இரு டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியா அட்டகாச வெற்றிகளை பதிவு செய்து, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், அடிலெய்டில் கடந்த 17ம் தேதி 3வது டெஸ்ட் துவங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 371, இங்கிலாந்து 286 ரன்கள் எடுத்தன.

பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 4ம் நாளில் 2வது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடர்ந்தது. 3ம் நாளில் சதம் விளாசி களத்தில் இருந்த ஆஸி அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், 170 ரன் குவித்து அவுட்டானார். அலெக்ஸ் கேரி 72 ரன்னுக்கு விக்கெட் பறிகொடுத்தார். 84.4 ஓவரில் ஆஸ்திரேலியா, 349 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதனால், 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதன் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி சிறப்பாக ஆடி 85 ரன் அடித்து நல்ல துவக்கம் தந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் 4, ஒல்லி போப் 17, ஜோ ரூட் 39, ஹேரி புரூக் 30, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5, ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அதனால், இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி நின்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ், நாதன் லியான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். தோல்வியை தவிர்க்க இன்னும் 228 ரன்கள் தேவைப்படும் நிலையில், இங்கிலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால், போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா செயல்பட்டு வருகிறது.

Tags : Ashes ,England ,Aussies ,Adelaide ,Australia ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...