பேறுகால அறுவை சிகிச்சை… பேணிக்காக்கும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

முன்பெல்லாம் ஒருவருக்கு குழந்தை பிறந்த செய்தியை சொன்னால் முதலில் ‘என்ன குழந்தை?’ எனக் கேட்பார்கள். ஆனால், இப்போதோ அது அப்படியே தலைகீழாக மாறி ‘அறுவை சிகிச்சையா? சுகப்பிரசவமா?’ என்றுதான் கேட்கிறார்கள். காரணம், கடந்த பதினைந்து வருடங்களில் மிக வேகமாக அதிகரித்துவிட்ட அறுவை சிகிச்சை எண்ணிக்கைதான். அதோடு, அறுவை சிகிச்சை சார்ந்த பல கட்டுக்கதைகளும் இதற்கான இன்னொரு காரணம் என்பதால், இதனைப் பற்றிய முழு விவரங்களையும், இயன்முறை மருத்துவத்தின் பங்கையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

அறுவை சிகிச்சை…

கருப்பையில் உள்ள குழந்தையை வெளியே எடுக்க தாயிற்கு முதலில் மயக்க மருந்து செலுத்துவர். சருமம் முதல் கருப்பை வரை உள்ள ஏழு திசுப் படலங்களை ஒவ்வொன்றாகக் கிழித்து குழந்தையினை வெளியே எடுக்க வேண்டும்.

யாருக்கெல்லாம்…?

* குழந்தையின் தலை கருப்பையின் வாய் நோக்கி திரும்பாமல் இருந்தால்,

* பிரசவ வலி வந்தும் கர்ப்பப்பை வாய் திறவாமல் இருந்தால்,

* பனிக்குட நீர் போதுமானதாக இல்லாமல் இருந்தால்,

*பனிக்குடம் உடைந்து நீர் அதிகம் வெளியேறியதால் குழந்தைக்கு சுவாசப் பிரச்னை, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தால்

* நஞ்சுக் கொடி கருப்பை வாயினை அடைத்திருப்பது,

* தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தினை இறுக்கமாக சுற்றி இருப்பதால்,

*தாயிற்கும் குழந்தைக்கும் ஏதேனும் அவசர நிலை (emergency) ஏற்பட்டிருந்தால்.

கட்டுக் கதைகள்…

அறுவை சிகிச்சை என்றாலே பயப்படும் அளவுக்கு கட்டுக்கதைகளை சொல்வார்கள். அவை…

* முதுகுத் தண்டில் போடப்படும் மயக்க ஊசியால் வாழ்நாள் முழுவதும் முதுகில் வலி வரும்.

* முதல் பிரசவம் அறுவை சிகிச்சை எனில் அடுத்தடுத்த பிரசவமும் அறுவை சிகிச்சை என நினைப்பது.

* மயக்க மருந்து கொடுப்பதால் பால் சுரப்பது தாமதம் ஆகுமென்பது.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

முறையான உடற்பயிற்சிகளை இயன்முறை மருத்துவரின் வழிக்காட்டுதலுடன் தொடர்ந்து செய்து வந்தால் எந்த வகையான உடல் தொந்தரவுகளும் வராது.
அறுவை சிகிச்சைக்கு முன்…

*கரு தரித்ததும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி முழு உடல் தசைகளையும் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தவாறு உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

*இவ்வகை உடற்பயிற்சிகளை செய்வதால் சுகப்பிரசவம் ஆவதற்கும் உதவியாய் இருக்கும். இல்லையெனில் அறுவை சிகிச்சை ஆன பின் அதிலிருந்து மீண்டு வரவும்
உதவியாய் இருக்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பின்…

*வயிற்று தசைகள் மீண்டும் வலிமை பெறுவதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக் கொடுப்பர்.

*முதுகு தசைகள் வலிமை பெறவும் உடற்பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றுத் தரப்படும்.

*வயிறு, முதுகு, இடுப்பு மற்றும் கால் தசைகள் முழுவதும் தளர்வுடன் இருக்க தசைத் தளர்வு பயிற்சிகள் வழங்கப்படும்.

*அறுவை சிகிச்சை செய்த அந்த நாள் முதல் வீட்டிற்கு செல்லும் வரை எப்படி எழுந்து அமர்வது, எப்போது நிற்க வேண்டும், நடக்க வேண்டும், படிகள் ஏறி இறங்க வேண்டும், தரையில் அமரலாம் போன்ற அறிவுரைகளையும் இயன்முறை மருத்துவர் வழங்குவர்.

*எளிய பயிற்சிகளில் முதலில் தொடங்கி பின் படிப்படியாக உடற்பயிற்சிகளை மாற்றிக் கொடுப்பர். எனவே, அறுவை சிகிச்சை முடிந்து தொடர்ந்து ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் இயன்முறை மருத்துவரின் வழிக்காட்டுதலின் பேரில் பயிற்சிகளை செய்வது அவசியம்.

*ஒரு முறை பரிந்துரைக்கும் உடற்பயிற்சியினை அடுத்த ஒரு மாத காலம் செய்துவந்தால் போதுமானது. பின் வேறு பயிற்சிகள் மாற்றி வழங்கப்படும். எனவே தினமும் இயன்முறை மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

விளைவுகள்…

*அறுவை சிகிச்சைக்குப் பின் உடற்பயிற்சிகள் செய்யவில்லை எனில் முதுகு வலி வரும் வாய்ப்பு அதிகம். பத்து வருடங்களானாலும் முதுகு வலி அப்படியேதான் இருக்கும் என்பதால் முறையாக பயிற்சிகள் செய்வது அவசியம்.

*உடலின் ஒவ்வொரு மூட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் முதுகு வலி வந்த சில வருடங்களில் கால் மூட்டு வலி, கழுத்து வலி வரும் வாய்ப்புகளும் அதிகம்.

*தசைகளை பலப்படுத்தாமல் இருந்தால் நாம் குனிந்து நிமிர்வது, பளு தூக்குவது, தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது என முதுகு எலும்புகளுக்கும் அதன் கீழ் அமைந்திருக்கும் ஜவ்வு தட்டுகளுக்கும் (Discs) அழுத்தம் அதிகமாகும். எனவே, எலும்பு தேய்மானம், ஜவ்வு தட்டு பிதுங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகம்.

மொத்தத்தில் எதிர்பாராத விதமாய் அறுவை சிகிச்சை நடந்துவிட்டால் பயந்து, அதிலேயே மனதினை இழந்துவிடாமல் உசிதமாய் உடற்பயிற்சிக்ளை கற்றுக்கொண்டு அதனை தொடர்ந்து செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருப்போம்.

The post பேறுகால அறுவை சிகிச்சை… பேணிக்காக்கும் இயன்முறை மருத்துவம்! appeared first on Dinakaran.

Related Stories: