சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலைத்திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மேற்கொண்டுள்ள பணிகளை மட்டும் முடிக்க அதிகாரிகளுக்கு சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். புதிதாக சாலை, வடிகால் பணிகளை தொடங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் அமுதா, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் சித்திக், மின்சார வாரிய அதிகாரிகள், சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சி ஆணையர்கள், ராதாகிருஷ்ணன், ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
The post வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை..!! appeared first on Dinakaran.