நன்றி குங்குமம் தோழி
“வீடு வரை மனைவி”, “காடு வரை பிள்ளை” என்றெல்லாம் கூறுவது உண்மைதான் என்றாலும், இரண்டு பேர்களோடு நாம் வாழ்நாள் முழுவதும் இருந்து விட முடியுமா, என்ன? சிறிய விழாவாக இருந்தால் கூட பத்து பேர் கலந்து கொண்டால்தான் அது சிறப்பாக அமையும். அது ேபால் ‘சாவாக’ இருந்தாலும் உறவினர் பத்து பேராவது ஆறுதல் சொல்ல வேண்டியுள்ளது. பிறக்கும் பொழுது இருக்கும் உறவுகளைவிட, வளர்ந்து ஆளாகி திருமணம் நடக்கும் பொழுது மேலும் உறவுகள் அதிகமாகவே சேருகின்றன. பெண்ணோ, ஆணோ திருமணம் ஆனவுடன் மற்றவர் குடும்ப உறவுகளையும், தங்களின் உறவுகளாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.
உறவுகள் ஒவ்வொன்றும் ஒரு ‘பூ’வாகக் கொண்டால் அனைவரும் ஒன்று கூடுவது என்பது ‘பூமாலை’யாகிறது எனலாம். ‘ஊர்கூடி தேர் இழுப்பது’ என்பார்கள். அனைவரும் ஒன்று கூடி தேரை வலம் பிடித்தால்தான் அது நகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓட ஆரம்பிக்கும். அதுபோல் குடும்பம் சீரும் சிறப்புமாக வாழ வேண்டி குடும்பத்தின் உறவுகள் அனைவரும் மறைமுகமாக தங்கள் ஆதரவை தந்து கொண்டுதான் இருப்பர். தனிப்பட்ட முறையில் சில சமயங்களில் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்படலாம். விரோதங்கள் கூட இருக்கலாம். ஆனால் யாரும் இவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பதில்லை.
ஆதரவு தந்து உதவினாலும், இல்லாவிட்டாலும் தொல்லை தராமல் இருப்பதுகூட ஒரு வகை உதவி என எடுத்துக் கொள்ளலாம். உன்னத உறவுகள் என்றும் நம் மனதில் நிற்பர். உதவாத உறவுகள் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டாலே நம் மனதில் இடம் பிடிப்பர். உறவில்லாதவர்களைக் கூட நம்மால் உறவாக மாற்றிக் கொள்ள முடியுமானால் அதுவும் நம் பெருந்தன்மைதான். சக மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு.
சொந்த உறவுகள் சில சமயங்களில் இடைவெளிவிட்டுப் பழகினாலும், வந்த உறவுகள், ஏற்றுக் கொண்ட உறவுகள் நம்மை விட்டுப் பிரிவதில்லை. நாம் வேலை பார்க்கும் இடத்தில், வெவ்வேறு இனத்தவருடன்தான் நட்பில் இருந்திருக்கிறோம். அவர்களிடம் இருந்த அன்பும் நட்பும் உறவுகளிடம் கூட கிடைக்கப்படாது. காரணம், உறவுகள் என்றோ ஒரு நாள் விசேஷங்களில்தான் சந்திக்கிறார்கள். நம்மைப்பற்றி முழுமையாக அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை. மேலோட்டமாக குடும்ப விபரங்களை பேசுகிறோம்.
ஆனால், ஒன்றாக பணிபுரியும் பொழுது பல வருடங்களுக்கு சிலருடன் நெருங்கிப் பழகமுடிகிறது. தினம் எதிர் கொள்ளும் பிரச்னைகளாகட்டும், சந்தோஷம் தரும் விஷயங்களாகட்டும் நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மனம் விட்டு சிலருடன் பேசும் பொழுது, கவலைகள் குறைந்து மனம் லேசாகிறது.உறவுகளோடு நண்பர்களையும் இணைத்து உறவுகளாக மாற்றிக் ெகாண்டு விட்டால் நம் பிரச்னைகளைக் கண்டு மனம் தளர வேண்டாம். உறவுகளை என்றோ பார்ப்போம். நம்முடன் பணியாற்றும் நண்பர்கள் எப்பொழுதும் உடனிருந்து நமக்கும் பாதுகாப்பாக நடந்து கொள்வார்கள். நம் மனக்குறைகளை அவர்களிடம் பகிர்வதால் நம் மனம் லேசாவதோடு, யார் என்ன திட்டுவார்களோ என்று யோசிக்கவும் வேண்டாம்.
நாம் வேலையில் சேர்ந்தவுடன் முதலில் ஒரு தோழியை சந்திப்போம். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த தோழியை சொந்த சகோதரியாக பார்க்க ஆரம்பிப்போம். இதில் இருவரும் ஒரே வயதை உடையவர்களாக இருப்பார்கள். சில சமயம் புதிதாக திருமணமானவர்களாவும் இருக்கலாம். ஒரே வயதில் இருக்கும் போது, அவர்களின் மனநிலை மற்றும் சிந்தனையும் ஒரே மாதிரிதான் இருக்கும். தங்கள் வீட்டில் நடைபெறும் விசேஷங்கள், தன் கணவர் மாமியார் குறித்தும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, மன ஆறுதலை தேடிக் கொள்வார்கள்.
கணவன் வீட்டில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வது குறித்த விவாதமும் இருவருக்குள்ளும் நடைபெறும். ஒருவருக்கொருவர் பூ கொடுத்துக் கொள்வது முதல் நகைகள் , உடைகள் என ஒரே மாதிரி அணிந்து கொண்டு வலம் வர ஆரம்பிப்பார்கள். இவர்களின் இந்த நட்பினைப் பார்த்து விசேஷ நாட்களில் இருவரும் எப்படி அலுவலகம் வருகிறார்கள் என பார்க்க மற்றவர்கள் காத்திருப்பார்கள்.
உறவுகள் குடும்பத்திலிருந்து மட்டுமே அமைகின்றன என்று சொல்லிவிட முடியாது. நண்பர்களாகப் பழகி உறவுகளாக நினைக்கப்படுபவர்கள் சமயங்களில் நிஜமான உறவுகளை விட அதிகம் நேசிப்பவர்களாகக் கூட அமைந்து விடுவதுண்டு. இதில் சில நட்புகள் தங்களில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர்களின் சூழலைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக உடன் துணை இருப்பவர்களும் உள்ளனர்.
இதுவே நட்பு வட்டாரங்கள் பெரியதாக இருப்பின், ஒருவர் உணவு கொண்டு வந்து தருவதும், மற்றொருவர் மருத்துவமனையில் இரவு நேரம் தங்கிக் கொள்வதும், சிலர் அவரின் குழந்தையைப் பார்த்துக் கொள்வது என எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிக்காக ஓடி வருவார்கள். ஆக உடன் பிறந்தால் தான் உடன்பிறப்பா என்ன? எங்கோ, யாருக்கோ பிறந்தாலும், சில பேரை நாம் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம். உறவுமுறை என்று வைத்துக் கொண்டாலே, பாசமும் பந்தமும் தானே வந்து விடுகிறது. இப்பவும் நிறைய பேர் அக்கா, அண்ணன் என்று தெரியாதவர்களைக் கூட அழைப்பதை காண முடிகிறது.
இன்றைய விஞ்ஞான சூழல், அதிகப்படியான வசதிகளை தந்து பாசத்தையும் பந்தத்தையும் வெகு தூரத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. அப்பொழுதெல்லாம் அப்பா, அம்மா இல்லாத குடும்பங்களில் கூட, உறவினர்கள் தங்கள் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு படிக்கவைப்பது முதல் திருமணம் நடத்துவது வரை தங்கள் பொறுப்புகளாகவே நினைத்து கடமையையும் கண்ணியத்தையும் காப்பாற்றி வந்தார்கள். அதனால் பிள்ளைகளும் தங்கள் இழப்புத் தெரியாமல் வளர்ந்தார்கள். பணம் சேர்த்துக் கொள்வதை விட உறவுகளை அதிகம் சம்பாதித்தார்கள்.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்
The post உன்னத உறவுகள் நட்பும் உறவும் appeared first on Dinakaran.