×

குழந்தைகளுக்கான பாட்டியின் ஆரோக்கிய உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

நம்முடைய பாட்டி சிறு வயதில் செய்து கொடுக்கும் உணவுப் பொருட்கள் எல்லாமே பாரம்பரியத்தோடும் நல்ல சத்தோடும் இருக்கும். அந்த மாதிரியான உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தன் பாட்டி அவர் காலத்தில் சமைத்த ஆரோக்கிய உணவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அதனை விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த சுலோச்சனா சரவணன். இவர் ‘பாப்பு டாடு’ என்ற பெயரில் இந்த ஹெல்த் ஃபுட்ஸினை விற்பனை செய்து வருகிறார்.

‘‘சொந்த ஊர் திருச்சி. இப்போது சென்னையில் வசிக்கிறேன். நான் பிபிஏ பட்டதாரி. கல்லூரி காலங்களிலேயே எனக்கு சொந்தமாக தொழில் செய்ய வெண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் என்ன தொழில் செய்ய முடியும் என்பதில்தான் தெளிவில்லாமல் இருந்தேன். வீட்டில் கல்யாணம் பேசி முடிச்சாங்க. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாகிட்டேன். வீட்டிலிருந்த நேரத்தில் சும்மா இருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. என் கணவரிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்தேன்.

அவருக்கும் சொந்தமா தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் சிறிய அளவில் என்ன தொழில் செய்யலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் என் கணவர் எப்போதும் அவர் பாட்டியின் சமையல் குறித்து பேசிக் கொண்டு இருப்பார். அந்தக் காலத்தில் என் பாட்டி எங்களின் ஆரோக்கியம் மேல் தான் கவனம் செலுத்துவாங்க.

வீட்டிலேயே பலவிதமான ஆரோக்கிய உணவுகளை தயார் செய்து தருவாங்கன்னு சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொல்வதைக் கேட்ட போது, அவரின் பாட்டி அனைத்து
உணவுகளையும் புதுவிதமாக தயார் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் பல குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாத நிலையில் இருப்பதையும் பார்த்துதான் வருகிறோம். அதனால் பாட்டி
தயாரித்த பொருட்களை எல்லாம் ஏன் தயாரித்து விற்பனை செய்யக்கூடாதுன்னு எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்படி தொடங்கியதுதான் இந்த ‘பாப்பு டாடு ஹெல்த் ஃபுட்ஸ்’ உணவுப் பொருட்கள்’’ என்றவர், தங்களுடைய தொழில் தொடங்கியது குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘தற்போது வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துள்ள பொருட்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலானவர்கள் வெளி உணவினைதான் அதிகம் விரும்பி சாப்பிடுறாங்க. அவை அனைத்தும் ஊட்டச்சத்தைவிட ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தக்கூடியதாக தான் உள்ளது. இதனால் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனை உலக பொது சுகாதார நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் பல பெரியவர்கள் உடல் பருமனோடு வாழ்கிறார்கள். குழந்தைகள் எடை குறைவாக இருக்கின்றனர். அதே சமயம் அதிக எடையுடனும் உள்ளனர். சில குழந்தைகள் வளர்ச்சிக் குன்றியவர்களாக இருக்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள பல இளம் பெண்களில் 30% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதி பேர் இரும்புச் சத்துக்களுக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது உலகமே சந்திக்கக்கூடிய பிரச்னையாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நம் அரசும் இந்தப் பிரச்னைக்காக பலவித திட்டங்களை செய்து வருகிறது. சரியான ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கு கிடைத்தாலே இந்தப் பிரச்னைகள் வராது. அதனால் ஊட்டச்சத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினோம்.

ஊட்டச்சத்து தொடர்பான செய்திகளை எல்லாம் பார்த்துதான் நாங்கள் ஹெல்த் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்திற்கே வந்தோம். அதற்காக ‘அம்மாவின் அன்பும் பாட்டியின் ஆரோக்கியமும்’ என்ற தலைப்பில்தான் பல வகையான ஊட்டச்சத்து உணவுகளை சந்தைக்கு கொண்டு வந்தோம். முதலில் நாங்களே வீட்டில் செய்து எங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்தோம்.

சத்து மாவு, இயற்கை முறையில் எடை குறைக்கும் பொடி, கருப்பு உளுந்து கஞ்சி மாவு, கருப்பு எள்ளு, கருப்பு உளுந்து பொடி, குண்டூர் பருப்பு சாதப் பொடி, வறுத்து அரைத்த முருங்கை பொடி, மூலிகை குளியல் பொடி, இயற்கை முகப்பொலிவு பொடி, மூலிகை கூந்தல் எண்ணெய், இட்லி பொடி, கறிவேப்பிலை பொடி, மரவள்ளிக்கிழங்கு அப்பளம், மாவடு, தேன் வகைகள், கஞ்சி மிக்ஸ் வகைகள் என பல வகையான பொருட்களை பேக்கிங் செய்து கொடுத்து வந்தோம். எங்களுடைய பொருட்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய வகையில்தான் தயாரித்து வழங்கி வருகிறோம்.

ஆரோக்கிய உணவுகளை தயாரிப்பது பிரச்னை இல்லை. ஆனால் இதில் இருக்கும் பிரச்னை அதனை சரியான விதத்தில் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இந்தத் தொழிலில் உள்ள முக்கிய சவாலாக எங்களுக்கு இருந்தது. தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் அடைய சமூக வலைத்தளங்களை தேர்வு செய்தோம்.

எங்களுக்கான பக்கம் அமைத்து அதில் எங்களின் அனைத்து உணவுப் பொருட்கள் குறித்த செய்திகளை பதிவு செய்தோம். கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய பொருட்கள் குறித்து மக்களுக்கு தெரிய வந்தது. விற்பனையும் அதிகரித்தது. ஒருமுறை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் எங்களிடம் வாங்க முன் வந்தார்கள். தரத்திலும் சுகாதாரத்திலும் நாங்கள் சமரசம் செய்யாமல் இதனை கொடுத்து வருகிறோம். அதுதான் எங்களின் சக்சஸுக்கான காரணம்’’ என்கிறார் சுலோச்சனா சரவணன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

 

The post குழந்தைகளுக்கான பாட்டியின் ஆரோக்கிய உணவுகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED குளிர் காலமும் வைட்டமின்களும்!