×
Saravana Stores

பழங்குடியினரும் இந்நாட்டின் மக்கள்தான்!

நன்றி குங்குமம் தோழி

நம்முடைய வாழ்க்கையை சமாளிப்பதிலேயே பெரும் சவாலாக உள்ள காலகட்டத்தில் பொதுமக்களுடைய பிரச்னைகளையும் கேட்டறிந்து அவர்களுக்காவும் வேலை செய்வது பெரிய பணி. இந்த வேலையை கடந்த ஐந்தாண்டுகளாக செய்து வருகிறார் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி. தன்னுடைய கணவருடன் அடர்ந்த காடுகள் வழியாக பயணித்து அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

‘‘எனக்கு சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. ரொம்ப சாதாரணமான குடும்பம்தான் எங்களுடையது. இருந்தாலும் வீட்டில் நல்லா படிக்க வச்சாங்க. தமிழில் முதுகலைப் பட்டம் முடிச்சிருக்கேன். நான் வாழ்ந்த கால கட்டங்களில் எங்க ஊரில் படிச்சிருந்தாலும் பெண்களை வேலைக்கு அனுப்பமாட்டாங்க. அதனால நான் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் எனக்கு திருமணம் ஆனது. என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர், நான் படிச்சிருப்பதால், வேலை செய்யச் சொல்லி ஊக்கமளித்தார். அதனால் தனிப்பட்ட முறையில் இ-சேவை மையம் ஒன்று தொடங்கினேன்.

என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டே, எங்க ஊர் மக்களுக்கும் சேவையினை செய்ய விரும்பினேன். எங்க ஊருக்கு அருகில்தான் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தாங்க. திருப்பூர் மாவட்டம் சுற்றி, 18 பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க மலையில் இருந்து இறங்கி சமவெளிப் பகுதிகளுக்கு வருவாங்க. ஆனால் நிலத்தில் இருக்கும் மக்கள் அவர்களை ஒதுக்குவதும், அவர்களின் பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கும் வாங்குவார்கள்.

இதெல்லாமே நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது பார்த்து இருக்கேன். அந்த சமயத்திலேயே நான் படிச்ச இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைப்பேன். ஆனால் அதற்கான சூழல் எனக்கு இப்பதான் அமைந்தது. என் எண்ணத்தை என் கணவரிடம் கூறினேன். அவரும் சம்மதிக்கவே, நான் பழங்குடி மக்களை நேரடியாக சந்திக்க புறப்பட்டேன்’’ என்றவர் தன் கணவருடன் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்றுள்ளார்.

‘‘இவர்கள் மலைகளில் வசிப்பதால், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல சரியான பாதைகள் இருக்காது. அடர்ந்த காடுகளுக்குள் இவர்கள் இருப்பதால், பல கிலோ மீட்டர்கள் நடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு போகும் போது, வன விலங்குகளின் அபாயமும் இருக்கும். அதை எல்லாம் கடந்துதான் போக வேண்டும். அப்படித்தான் பல தடைகளை கடந்து இவர்களை சந்தித்தேன். பழங்குடி மக்கள் மலையில் வசித்தாலும் அவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக சமவெளிக்கு வருகிறார்கள். இங்கு அவர்கள் தங்கி படிப்பதற்காகவே அரசு பள்ளி அமைத்துள்ளது. தினமும் மலைக்கு சென்று வர முடியாது என்பதால், பள்ளியிலேயே இவர்கள் தங்கி விடுகிறார்கள். வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டிற்கு வருகிறார்கள்.

அதேபோல் காலாண்டு மற்றும் இறுதியாண்டு விடுமுறைக்கு மலையில் இருப்பார்கள். இதில் முக்கியமானது, பல குழந்தைகள் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றால், மீண்டும் பள்ளிக்கு திரும்புவதில்லை. இதனால் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது அதிகமாகி கொண்டே போனது. நான் பழங்குடி கிராமத்திற்கு சென்ற போது இது குறித்து தெரிய வந்தது. அதனால் நான் குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து பேசி புரிய வைத்தேன்.

பிறகு நான் வரும் போது அங்கிருந்த குழந்தைகளை அழைத்து வந்து பள்ளிகளில் மீண்டும் சேர்த்து விட்டேன். அப்படி அழைத்து வரும் ஒரு மாணவனை பள்ளியில் சேர்த்து விட்டால் எல்லாமே முடிந்துவிடாது. அடுத்து அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். இதனால் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்தது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் நான் தன்னார்வலராக இணைந்து கொண்டு பல குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். நண்பர்களுடன் இணைந்து, பழங்குடி மக்களின் மொழியில் குழந்தைகளை வைத்து கதை சொல்லி அவர்களுக்கு மேலும் கல்வி மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினேன்’’ என்றவர் இவர்களும் இந்நாட்டு குடிமக்கள் என்பதற்கான அடையாளத்தினை பெற்றுத் தந்துள்ளார்.

‘‘நான் இவர்களை தொடர்ந்து சந்திக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது இவர்களுக்கு ஆதார், வாக்கு அட்டை என எந்த விதமான அடையாள அட்டைகளும் கிடையாது என்று. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் இ – சேவை மையம் மூலம் வாங்கி தர முடிவு செய்தேன். ஆனால் இவர்களை மலையில் இருந்து அழைத்து வருவது அவ்வளவு சுலபமில்லை. அதனால் நானும் என் கணவரும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று விண்ணப்பிக்க முடிவு செய்தோம்.

லேப்டாப் மற்றும் பிரின்டர் எடுத்துக் கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் வசிப்பது அடர்ந்த காடு என்பதால், அங்கு நெட்வொர்க் கிடைக்காது. அதனால் மரங்களில் ஏறி எங்கு நெட்வொர்க் கிடைக்கிறதோ அந்த இடத்தில் கருவியை பொருத்தி, மரத்திற்கு கீழ் அமர்ந்து அவர்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வேன். இந்திய நாட்டின் குடிமகன் என்பதற்கான சரியான சான்றுகள் இவர்களுக்கு இல்லாத காரணம், இந்த மக்களுக்கு வீடுகள் இல்லை.

ஒரு பிளாஸ்டிக் போர்வையைக் கொண்டு குடில் அமைத்து அதில்தான் வசித்து வருகிறார்கள். ஒரு சின்ன இடத்தில் ஒன்பது குடும்பங்கள் வாழ்கிறார்கள். வீடு மற்றும் சரியான விலாசம் இல்லாத காரணத்தால், சான்றுகளுக்காக விண்ணப்பித்தலிலும் பிரச்னைகள் இருக்கிறது. இதனாலேயே பல அரசு திட்டங்கள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் அவர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்து புரிய வைத்து, அதற்கான சான்றிதழ்களை பெற்றுத் தந்தேன்.

பொதுவாக பழங்குடி மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் கிழங்குகள், மிளகு, தேன் போன்றவற்றை விற்று தான் இவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இந்த நிலையில் பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்பு என்பது குறைவு. நான் செல்லும் போதெல்லாம் அவர்கள் தங்களுக்கென வேலைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். கூலி வேலைக்கு சென்றாலும் தகுந்த கூலி கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் அவர்களுக்கென்று தனியாக ஒரு சுயதொழிலை உருவாக்கி கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. தஞ்சாவூரில் பெண்களுக்கு கைவினை பொருட்களை செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள். அதை கற்றுக் கொள்ள வரும் பெண்களுக்கு ஊக்கத்தொகையும் அளிக்கிறார்கள்.

அங்கு பயிற்சி பெற்று தேங்காய் நாரில் தரையில் விரிக்கும் மேட்கள், தேங்காய் ஓடுகளில் செய்யும் கைவளையல்கள், கிளிப்புகள் போன்ற பொருட்களை செய்ய பழகினார்கள். அதன் பிறகு வீடுகளில் இருந்து கொண்டே, இவர்கள் இதை செய்து தருவார்கள். அதை நான் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்தேன். அதன் பிறகு கடைகளிலும் தொடர்ந்து ஆர்டர் பெற்று, அதில் வரும் வருமானத்தை அவர்களுக்கு கொடுத்தேன்.

இந்த தொழில் மூலம் தங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் மாலை நேரங்களில் முதியோர்களுக்கு எழுத படிக்க கற்றுத்தருகிறேன். இவையெல்லாமே என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் செய்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் இவர்களின் கிராமத்திற்கு செல்வது என்பது பெரிய டாஸ்காகத்தான் இருக்கும். ஒரு முறை கிராமத்திலிருந்து திரும்பும் போது வழியில் யானை ஒன்று துரத்த அதனிடம் இருந்து தப்பி ஓடி வந்தோம். இந்த கஷ்டங்களை தாண்டியும் மக்களுக்காக வேலை செய்கிறோம் என்ற உணர்வுதான் என்னை அவர்களிடம் அழைத்து செல்கிறது’’ என்றார் ராஜேஸ்வரி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பழங்குடியினரும் இந்நாட்டின் மக்கள்தான்! appeared first on Dinakaran.

Tags : Kungumum Dothi ,
× RELATED உன்னத உறவுகள் நட்பும் உறவும்