×

படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும் வளமான எதிர்காலம் காத்திருக்கு!

நன்றி குங்குமம் தோழி

படிப்பை குடும்பச்சூழல் காரணமாக தொடர முடியல… +2வில் ஒரு சப்ஜெக்டில் தேர்ச்சிப் பெறல, அதன் பிறகு மறுதேர்வு எழுத முடியல என்று இன்றும் பல மாணவ, மாணவிகள் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு கூலி வேலைக்கோ அல்லது வீடு மற்றும் வயல் வேலைக்கு செல்கிறார்கள். கிராமத்தில் மட்டுமில்லை சிட்டியிலும் படிப்பை பாதியிலேயே விட்டவர்களின் நிலை இப்படித்தான் உள்ளது. ஒரு பாடத்தில் தேர்ச்சிப் பெறவில்லை என்றால் அவர்கள் திறமைசாலிகள் இல்லை என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு வேறு திறன் இருக்கும். அதற்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலையில் நியமித்து வருகிறார் சென்னையை சேர்ந்த ரமேஷ்.

இவரின் ‘லயம்’ நிறுவனம் இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஏற்ற வேலையிலும் நியமிக்கிறார்கள். இதன் மூலம் ஒரு வருமானம் குடும்பத்திற்கு கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்கள் தங்களின் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ளவும் முடிகிறது. ‘‘நான் பிரபல மோட்டார் நிறுவனம் ஒன்றில் 20 வருடம் வேலை பார்த்தேன். அதன் பிறகு பல நிறுவனங்களில் மனிதவளத் துறையில் வேலை பார்த்து வந்தேன். ரிடையர்மென்டுக்குப் பிறகு சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த நோக்கத்தில்தான் பத்து வருடத்திற்கு முன்பு லயம் ஆரம்பித்தேன்.

இப்ப என் வயசு 70. நான் மனிதவளத்துறையில் இருந்ததால், மார்க்கெட் நிலவரம் தெரியும். பொதுவாக பெரிய நிறுவனங்கள் அனைத்தும் டிகிரி அல்லது பொறியியல் படித்த மாணவர்களுக்குதான் முன்னுரிமை தருவது வழக்கம். ஆனால் படிப்பை பாதியில் விட்டவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் பற்றி எந்த நிறுவனமும் சிந்திப்பதில்லை. அவர்களால் படிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் திறமை என்று ஒன்று கண்டிப்பாக அவர்களுக்குள் ஒளிந்திருக்கும். அதற்கு ஏற்ப பயிற்சி அளித்தால் கண்டிப்பாக அவர்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர முடியும். இதைத்தான் நான் நிறுவனங்களுக்கு எடுத்துரைத்தேன். அவர்களும் வாய்ப்பு கொடுக்க முன்வந்தார்கள்.

தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 10ம் வகுப்பு, +2, டிப்ளமோ படிப்பினை தொடர்ந்து படிக்க முடியாமல் இருந்தவர்களை கண்டறிந்தேன். அதன் பிறகு நிறுவனங்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டேன். அதற்கு ஏற்ப மாணவ, மாணவியரை தேர்வு செய்தேன். பிறகு அவர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு பரிந்துரைத்தேன். நிறுவனங்கள் அவர்களின் திறனுக்கு ஏற்ப தேர்வு நடத்தி அதில் மாணவர்களை பயிற்சிக்காக தேர்ந்தெடுத்தார்கள்.

இரண்டு அல்லது மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு அவர்கள் அந்த நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். பயிற்சி காலத்திலும் அவர்கள் வேலையை கற்றுக் கொண்டு அதனை செய்வதால், ஊக்கத்தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் 2000 பேர் என இந்த பத்தாண்டுகளில் சுமார் ஒரு லட்சம் பேரை நான் வேலையில் நியமித்து இருக்கிறேன்’’ என்றவர், இதற்காக தனிப்பட்ட குழுக்களை அமைத்து அதன் மூலம் மாநிலம் முழுதும் செயல்பட்டு வருகிறார்.

‘‘முதலில் சென்னையில்தான் என்னுடைய தேடல் துவங்கியது. இதற்காக ஒரு தனிப்பட்ட குழுவினை அமைத்தேன். அவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி போன்ற கல்வி மையங்களுக்கு சென்று அங்கு பாதியில் படிப்பை விட்டு சென்ற மாணவர்களின் பட்டியலை சேகரிப்பார்கள். எங்களின் குழு மட்டுமில்லாமல் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாகவும் கிராமங்களில் உள்ள மாணவர்கள் குறித்து விவரங்களை சேகரித்தோம். அதன் பிறகு அந்த மாணவர்களை நேரடியாக சந்திப்போம். முதலில் மாணவர்களின் பெற்ேறார்களுக்கு இது குறித்து விவரிப்போம்.

ஆரம்பத்தில் பலர் அஞ்சினார்கள். காரணம், திடீரென்று உங்க மகன், மகளுக்கு வேலை தருகிறேன் என்று சொல்லி அழைத்தால் யார்தான் சம்மதம் தெரிவிப்பார்கள். நாங்க என்ன செய்கிறோம், இதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் வேலை குறித்து புரிய வைத்தோம். அதன் பிறகு அவர்கள் சம்மதித்தால் மட்டுமே அந்த மாணவரை தேர்வு செய்வோம். யாரையும் நாங்க வற்புறுத்துவதில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். சிலர் படிப்பைத் தொடர முடியவில்லை என்றாலும் வீட்டின் சூழல் அறிந்து ஏதாவது வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் அப்படி இருக்கமாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் அவசியமாக இருந்தது. பயிற்சியின் காலம், அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கப் போகும் வேலை மற்றும் சம்பளம் என எல்லாம் புரிய வைத்தோம். ஒரு சிலர் பயிற்சி பிடிக்காமல் பாதியிலேயே சென்றுவிடுவார்கள். பெண்களில் சிலர் திருமணத்திற்குப் பிறகு வேலையை தொடரமாட்டார்கள். இப்படி பல சிக்கல்கள் இதில் இருந்தது. அதை எல்லாம் கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்தோம்.

வேலை, சம்பாத்தியம் முக்கியம் என்பதை மனதளவில் புரிய வைத்தோம். இப்போது எங்களின் குழு மக்கள் அந்தந்த ஊருக்கு சென்றால் போதும், மாணவர்களாகவே இதில் இணைய ஆர்வமாக முன் வருகிறார்கள்’’ என்றவர், தமிழகம் மட்டுமில்லாமல் புனே, டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், உத்ரகாண்ட் போன்ற இடங்களில் தங்களின் கிளைகளை துவங்கி அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

‘‘இந்த துறையை பொறுத்தவரை பெரும்பாலான பெண்களுக்குதான் அதிக அளவில் வாய்ப்புள்ளது. காரணம், ஆட்டோமொபைல் அல்லது செல்போன் போன்ற நிறுவனங்களில் பொருட்களை மிகவும் நுணுக்கமாகவும், கவனமாகவும் அமைக்க வேண்டும். அதற்கு பெண்கள் தான் சரியான தேர்வு. காரணம், இவர்கள் இயற்கையிலேயே பொறுமை குணம் கொண்டவர்கள். மேலும் ஒரு வேலையை மிகவும் துல்லியமாக செய்து முடிப்பார்கள். அதனால் இது போன்ற வேலைக்கு பெண்கள்தான் அதிகம் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை கொஞ்சம் கனரக வேலைகளுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். லயம் மூலமாக நாங்க யாரையும் தேர்வு செய்து வேலையில் நியமிப்பது இல்லை. நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்று எங்களிடம் கேட்பார்கள். அதன் பிறகுதான் நாங்க மாணவர்களை அணுகுவோம். அதில் விருப்பமுள்ளவர்களை நேரடியாக நிறுவனத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டு நிறுவனம் அவர்களை வேலையில் நியமிக்கும்.

தேர்வு செய்யப்படாத மாணவர்களுக்கு நாங்க வேறு நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம். மேலும் ஒவ்வொரு ஆண்டு முடியும் போது, பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி போன்ற கல்வி மையங்களுக்கு சென்று இது குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதில் விருப்பம் உள்ளவர்களை மட்டும்தான் தேர்வு செய்கிறோம். பயிற்சிக்காக வருபவர்கள் தங்குவதற்காக நாங்க முதலில் ஏற்பாடு செய்து தருகிறோம்.

அதன் பிறகு அவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஹாஸ்டலோ அல்லது ஐந்து பேர் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கிக் கொள்கிறார்கள். வாய்ப்புகள் நிறைய இருக்கு. அதை திறமையாக பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக இவர்களைப் போன்றவர்களுக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கு. அதற்கான வழிகாட்டுதலாக நாங்க செயல்படுகிறோம்’’ என்றார் ரமேஷ்.

தொகுப்பு: ரிதி

The post படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும் வளமான எதிர்காலம் காத்திருக்கு! appeared first on Dinakaran.

Tags : Saffron Girl ,Dinakaran ,
× RELATED ஷாம்பு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்!!