×

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: நடிகர் விஜய் அறிவிப்பு

சென்னை: வருகிற சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, தமிழ் நாளிதழ் ஒன்று (தினகரன் அல்ல) உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். கழகத் தலைவர் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

 

The post வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: நடிகர் விஜய் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijay Announces ,Chennai ,Tamil Nadu Victory Party ,General Secretary ,Bussy Anand ,Adamugawa ,first State Conference ,Tamil Nadu Victory Club ,Supreme Leader ,Vijay Announcement ,Dinakaran ,
× RELATED சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்...