கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக எதிர்கட்சி அல்ல, பாஜதான் எதிர்கட்சி என காட்டுவதற்கு பெரிதும் முயற்சிக்கிறார். ஆளுங்கட்சி மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை அடுக்கினால்தான், எதிர்க்கட்சி தலைவராக காட்டிக் கொள்ள முடியும் என நம்புவதாக தெரிகிறது. இவ்விவகாரத்தில் அண்ணாமலை செய்வது அப்பட்டமான ஆதாய அரசியல்.
அண்ணாமலை லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என தெரியவில்லை. தன்னைத்தானே வருத்தி கொள்ளும் முடிவை அவர் எடுப்பது வருத்தம் அளிக்கிறது. காந்தியடிகள்கூட இப்படிப்பட்ட போராட்டத்தை கையில் எடுக்கவில்லை. சாட்டையால் அடித்து கொள்வது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்கு உரியதாக மாறிவிடக்கூடாது. சிலர் என்னை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். விளக்கம் கொடுத்தாலும், அவர்கள் விரும்பும் சூதாட்டத்தை நடத்த பார்க்கிறார்கள். விசிக அதற்கு இடம் கொடுக்காது. நாங்கள் யாரையும் மிரட்டும் நிலையிலும் இல்லை. எங்களை யாரும் மிரட்டுகிற நிலையிலும் இல்லை. இவ்வாறு கூறினார்.
The post லண்டனில் இருந்து திரும்பிய பிறகு என்ன ஆனது? அண்ணாமலை செய்வது அப்பட்டமான ஆதாய அரசியல்: திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.