சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி, மும்பை கிளை சங்க தலைவர் ஏ.ராமராஜன், செயலாளர் ஆர்.சண்முகவேல், பொருளாளர் ஏ.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கோயில் விழாக்களில் இரவு 2 மணி வரை ஒலிபெருக்கி, வில்லிசை கச்சேரி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனுமதி அளித்து உத்தரவு வழங்க வேண்டும். காமராஜரின் பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலையில் படித்து உயர் மதிப்பெண் பெறுகிற முதல் 2 பேருக்கு காமராஜர் உருவம் பொறித்த தங்கப்பதக்கமும், ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவிக்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.