ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே வளர்ந்துள்ள கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்களை அகற்றுவதற்கு சட்டத்தை எளிமையாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென் மேற்கு பருவமழை பெய்யும். பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடக்கிழக்கு பருவமழை பெய்யும். இவ்விரு பருவமழையின் போதும், அங்காங்கே மண் சரிவுகள், மரங்கள் விழுந்து பெரிய அளவிலான சேதம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, மின்வாரியம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலைத் துறைகளுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இதுமட்டுமின்றி, இந்த மழைக்கு ஆண்டு தோறும் மனித உயிர்களும் பலியாவது தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக, மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டுமே இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மரங்கள் விழுந்து ஏற்படும் விபத்துக்கள் கற்பூர மரங்களால் மட்டுமே. ஒரு சில பகுதிகளில் மட்டுமே சோலை மரங்கள் காற்றிற்கு விழுகின்றன. கற்பூர மரங்களாலேயே விபத்து அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு அருகேயும், சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
விபத்துக்கள் ஏற்பட்டால் மட்டும், அப்பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவதும், அதன்பின் கண்டு கொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, ஊட்டி-கூடலூர் சாலையில் எச்பிஎப் முதல் நடுவட்டம் வரை சாலையோரங்களில் கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்களை அதிகம் வளர்ந்துள்ளன. அதேபோல், மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் நுந்தளா வரையிலும், கைகாட்டி முதல் சாம்ராஜ் வரையிலும் இந்த மரங்கள் சாலையோரங்களில் வளர்ந்துள்ளன. ஆண்டு தோறும் பருவமழையின் போது, சாலையோரங்களில் உள்ள இந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இவைகளை அகற்ற தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் படாதபாடு படுகின்றனர்.
சாலையில் இருந்து 3 மீட்டர் தொலைவிற்கு உள்ள மரங்களை அகற்றினாலேயே விபத்துக்களை தவிர்க்கலாம். மேலும், போக்குவரத்து பாதிப்பு, மின் துண்டிப்பு ஆகியவைகளை தடுக்க முடியும். குறிப்பாக, ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் காந்திப்பேட்டை வரை சுமார் 3 கிமீ தூரத்திற்கு லாரன்ஸ் பள்ளிக்கு சொந்தமான மரங்களே சாலைகளில் விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இது போன்று சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வருவாய்த்துறை மற்றும் வனத்துறையிடம் உரிமையாளர்கள் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆனால், பொதுமக்கள் விண்ணப்பித்தால், உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. எனவே, இது போன்ற ஆபத்தான மரங்களை அகற்ற முடியாமல் பொதுமக்களும், பிற அரசு துறைகளும் பாதிக்கின்றனர். எனவே, குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ள கற்பூர மரங்களை அகற்ற அரசு சட்டத்தை எளிமையாக்க வேண்டும் அல்லது குடியிருப்புகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள ராட்சத கற்பூர மரங்களை அகற்ற அரசே முன் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நீலகிரியில் கற்பூரம், சீகை மரங்களை அகற்ற சட்டத்தை எளிமையாக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.