நீலகிரி சுற்றுலா தலங்களில் அதிகரிக்கும் இளம் தலைமுறையினரின் ‘ரீல்ஸ் வீடியோ’ மோகம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்திலும் சுற்றுலா தலங்களில் இளம் தலைமுறையினர், செல்போன் மூலம் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகம் அதிகரிக்க துவங்கி உள்ளது.
தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்கால கட்டத்தில் செல்போன் இல்லாத இடங்களே இல்லை என்று ெசால்லும் அளவிற்கு அனைத்து தரப்பினரிடமும் செல்போன்கள் உள்ளது. அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிக மொபைல் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அதிக மொபைல் போன் நுகர்வினால் எந்த புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தாலும் அதனை உடனே பயன்படுத்தி மக்கள் ஆனந்தமடைகின்றனர். தொலைபேசிக்கு மாற்றாக வெறும் தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான செல்போன்கள் ஸ்மார்ட் போனாக மாறி இன்று படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, ஆன்லைன் ஷாப்பிங், உணவு ஆர்டர் செய்வது முதல் உடற்பயிற்சி செயலி வரை, பணம் எடுப்பது முதல் பள்ளிப் பாடங்களை கற்பது என அவை இல்லாமல் உலகம் இயங்குவதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு செல்போன்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பொதுவாகவே ஒரு புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வரும்போது அது கண்டுபிடிக்கப்பட்டதற்கான நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதற்கு எதிர்மறையான சில பாதிப்புகளையும் சில சமயங்களில் ஏற்படுத்தவே செய்யும். சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவற்றில் ரீல்ஸ் எனப்படும் சிறு வீடியோக்கள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. பதிவிடப்படும் ரீல்ஸ்களுக்கு லைக்குகள், ஷேர்களை அள்ள இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்கின்றனர்.

பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களை செய்து வீடியோ எடுத்து பதிவிடுவது போன்றவற்றை செய்கின்றனர். நீலகிரிக்கு சுற்றுலா வரும் இளைஞர்களும் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிடும் மோகம் அதிகரித்துள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் வனங்கள், பாறைகள் நிறைந்த மலைகள், ஆறுகள், அணைகள் போன்றவைகள் உள்ளன. இவற்றின் அருகில் ரீல்ஸ் வீடியோ செய்யும் போது தவறி விழுந்து உயிரிழக்க கூடிய அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைப்பது அவசியம் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post நீலகிரி சுற்றுலா தலங்களில் அதிகரிக்கும் இளம் தலைமுறையினரின் ‘ரீல்ஸ் வீடியோ’ மோகம் appeared first on Dinakaran.

Related Stories: