×

அடுத்த மாதம் 2வது முறை அமித்ஷா தமிழகம் வருகை? கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டம்

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. கட்டுக்கோப்பான நிலையில் திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் வாய்ப்பும் இருக்கிறது. தேர்தலை சந்திக்கும் வகையில் தொகுதி வாரியாக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில் பாஜ, அதிமுக கூட்டணியை வலுப்படுத்தவும், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, தேமுதிக, பாமகவை கூட்டணியில் சேர்க்கவும் கடும் முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக கடந்த 8ம் தேதி அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தார். அங்கு அவர் பாஜ நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அத்துடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார். பொதுக்கூட்டத்தில் எப்படியாவது பாமக, தேமுதிக கூட்டணியை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.

பாமக, தேமுதிக கட்சிகளின் தொடர் இழுபறியால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் மதுரை பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு, விரக்தியுடன் அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என கூறி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அவர் கோவை அல்லது திருச்சிக்கு வரலாம் என தெரிகிறது. அப்போது அவர் பாஜ கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.

The post அடுத்த மாதம் 2வது முறை அமித்ஷா தமிழகம் வருகை? கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Tamil Nadu ,Chennai ,Union ,Home Minister ,general elections ,DMK ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்