×

கிணற்றில் முதியவர் எலும்புக்கூடு மீட்பு; யார் அவர்? போலீசார் விசாரணை

வந்தவாசி, நவ.30: வந்தவாசி அருகே விவசாய கிணற்றில் முதியவர் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. அவரை கொலை செய்து வீசினார்களா? யார் அவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி அடுத்த வீராம்பாக்கம் மணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நந்திகேசன். இவரது விவசாய கிணறு அதே கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று இந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு மிதந்தது கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், டிஎஸ்பி தங்கராமன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று, அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்த நபர் ஆண் எனவும், அவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம், இறந்து 3 மாதத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து மணிபுரம் விஏஓ கொடுத்த புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிந்தார். மேலும், எலும்புக்கூடாக மீட்கப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கிணற்றில் எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : skeleton recovery ,Police investigation ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை