×

கண்டாச்சிபுரம் அருகே பழமைவாய்ந்த பாறை ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கண்டாச்சிபுரம், நவ.20:  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை மற்றும் கீழ்வாலை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீர் ஆய்வு செய்தார்.
மிகவும் பழமை வாய்ந்த கீழ்வாலை பாறை குகை ஓவியங்கள் நான்கு தொகுதிகளாக உள்ளன. முதலாமவற்றில் ஒருவன் குதிரை மீது இருந்தவாறு மற்றோருவன் குதிரையை கயிற்றில் கட்டி இழுத்து வருவதாகவும், மூன்றாமவன் கையைக் கட்டிக்கொண்டு அவர்களை வணங்குவதாகவும் சிவப்பு நிறத்தில் இன்றைக்கும் அழியாத ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் கி.மு 1000 முதல் கி.மு 500க்கு இடைப்பட்ட காலத்தில் வரைந்ததாக கருதப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஓவியங்கள் இன்றைக்கும் அழியாமல் இருப்பது பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த ஓவியங்கள் அன்றைய விலங்குகளின் கொழுப்பினால் வரைந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இதுபோன்ற பழமையான ஓவியங்கள் இன்றைக்கு பலரும் அறிந்திராத ஒன்றாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாமலும் உள்ளது. இதனால் சில சமூக விரோதிகளால் இக்குகை பாறை ஓவியங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 10ம் தேதி தமிழ்நாடு தொல்லியல்துறை உதவி இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் அலுவலர் பாக்கியலட்சுமி மற்றும் தாசில்தார் கார்த்திகேயன் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்து இக்குகை பாறை ஓவியங்களை பார்வையிட்டு, இதுபோன்ற வரலாற்று சின்னங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்காக சாலை அமைத்து தரும்படி பிடிஓ சாம்ராஜ்ஜிடம் அறிவுறுத்தினார். அருகில் கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் கீழ்வாலை விஏஓ மணிகண்டன் மற்றும் மேல்வாலை விஏஓ சுகுமாரன் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர்கள் இருந்தனர்.



Tags : District Collector ,Kandachipuram ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...