×

2 மகள்களை குத்திக் கொன்ற தொழிலாளி * மனைவி கவலைக்கிடம் * கீழ்பென்னாத்தூர் அருகே பரபரப்பு மனைவி மீது நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல்

கீழ்பென்னாத்தூர், நவ.12: கீழ்பென்னாத்தூர் அருகே மனைவி நடத்தையை சந்தேகித்து, 2 மகள்களை தந்தையே கம்பியால் குத்தி கொலை செய்தார். மேலும் தாக்குதலில் படுகாயம் அடைந்த மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(38), நெசவு தொழிலாளி. இவரது மனைவி தேவிகா(28). இவர்களது மகள்கள் மீனா(10), ஷிவானி(8). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மீனா 5ம் வகுப்பும், ஷிவானி 3ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக நெசவு தொழிலில் சரிவர வருமானம் கிடைக்காததால் முருகன் மனவேதனையுடன் இருந்து வந்தாராம். அரசு பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த தேவிகா, தற்போது பள்ளிகள் திறக்காததால், கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சென்று வருகிறார்.

தனக்கு வருமானம் இல்லாத நிலையில், மனைவியின் வருமானத்தில் வாழ்வதா? என முருகன் மனஉளைச்சலில் இருந்தாராம். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். முருகன், வேலைக்கு செல்லாதே என கூறியும், தேவிகா குடும்பம் நடத்த பணம் தேவைப்படுவதால் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தேவிகா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது முருகன், ‘வேலைக்கு போகாதே என கூறியும், ஏன் செல்கிறாய்' எனக்கேட்டு தகராறு செய்ததுடன், தேவிகாவை ஆபாசமாக பேசினாராம். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், முருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இதையடுத்து, இரவு 10 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்த முருகன், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து, தூங்கிக்கொண்டிருந்த மகள்கள் ஷிவானி, மீனாவின் தலையில் கடுமையாக குத்தியுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து, அவரை தடுக்க முயன்ற தேவிகாவின் தலையிலும் கம்பியால் சரமாரி தாக்கினாராம். இதில், சிறுமி ஷிவானி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுமி மீனா, தேவிகா ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி மீனா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த தேவிகாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கவலைக்கிடமான நிைலயில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், முருகன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி அரவிந்த், ஏஎஸ்பி கிரண்ஸ்ருதி, டிஎஸ்பி அண்ணாதுரை, பயிற்சி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஷிவானியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகித்து, 2 மகள்களை தந்தையே கம்பியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : daughters ,death ,
× RELATED விஷக்கிழங்கு சாப்பிட்ட தொழிலாளி சாவு