×

கோமுகி அணை திறந்து ஒரு மாதமாகியும் 1.3 அடி நீர் மட்டுமே குறைந்துள்ளது

கள்ளக்குறிச்சி, நவ. 6:  கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலையடி வாரத்தில் கோமுகி அணை உள்ளது.  இந்த அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்த போதிலும் அணையின் கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே நீரை சேமித்து வைக்கின்றனர்.  கோமுகி அணை மூலம் 10ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  கல்வராயன்மலைபகுதியில் செப்டம்பர் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக  கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாசன விவசாயிகளின் நலன் கருதி கோமுகி அணையின் முதன்மை கால்வாயிலும், கோமுகி ஆற்றிலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

 மேலும் கல்வராயன்மலைப்பகுதியில் பெய்து வந்த  மழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரும் பொட்டியம், மாயம்பாடி, கல்பொடை உள்ளிட்ட ஆறுகளில் இருந்து அதிகப்படியான நீர் வரத்து இருந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை அணை நிரம்பியது. மேலும் தற்போது சம்பா பருவ சாகுபடிக்கு முதன்மை பாசன கால்வாயில் 100 கனஅடி நீரும், கோமுகி ஆற்றில் 120 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
   இந்நிலையில் பருவ மழை பல்வேறு மாவட்டங்களில் தொடங்கிய போதும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை. ஆனாலும்
அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து மிக குறைவாகவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக குறைந்து வருகிறது. அதாவது 44 அடி இருந்த அணையில் தற்போது 42.7அடி நீர்மட்டம் உள்ளது. தற்போது சம்பா பருவ சாகுபடிக்கு பயிர் நடவு செய்துள்ள நிலையில் அணையில் தொடர்ந்து சுமார் 43 அடி நீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : opening ,Gomukhi Dam ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்