×

2.41 கோடியில் குழந்தை சாட்சிகள் விசாரணை மையம்

* செங்கம், தண்டராம்பட்டில் புதிய நீதிமன்றம்
* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி காணொலியில் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் திருவண்ணாமலை, நவ.5: திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் குழந்தை சாட்சிகள் விசாரணை மையத்தை காணொலி காட்சி மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்றும் குழந்தை சாட்சிகள் விசாரணை மையம், செங்கம் சார்பு நீதிமன்றம், தண்டராம்பட்டு உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், அதற்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது.

விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்து பேசினார். இதில், உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார். அதையொட்டி, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த காணொலி நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட நீதிபதி திருமகள், தலைமை குற்றவியல் நீதிபதி ராம், டிஆர்ஓ ரத்தினசாமி, ஏஎஸ்பி கிரண்சுருதி, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் முதன்முறையாக, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பாதிப்புக்குள்ளாகும் மற்றும் குழந்தை சாட்சிகள் விசாரணை மையம் ₹2.41 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகள் அச்சமின்றி சாட்சி சொல்ல வசதியாக இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், காணொலி மூலம் விசாரிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செங்கம் சார்பு நீதிமன்றம் திறப்பதன் மூலம், இதுவரை திருவண்ணாமலை கோர்ட்டில் நடந்து வந்த வழக்குளில் 1,200 வழக்குகள் அங்கு மாற்றப்படும். தண்டராம்பட்டில் திறக்கப்படும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சாத்தனூர், தண்டராம்பட்டு, வானாபுரம், தானிப்பாடி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Child Witness Investigation Center ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான...