×

அரகண்டநல்லூரில் விவசாயிகள் திடீர் சாலைமறியல்

திருக்கோவிலூர், நவ.3:  திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்த விளை பொருட்களுக்கு நீண்ட நாட்களாக பணம் தராததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. மாவட்டத்திலேயே நெல் தானியங்கள் வரத்து அதிகமாக உள்ள விற்பனை கூடமாக இது திகழ்கிறது. இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரடி பணம் பரிவர்த்தனை திட்டத்தில் பணம் செலுத்தும் முறை அண்மையில் நடைமுறைக்கு வந்தது.  இதில் இருந்து விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன் விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  அவர்கள் கூறுகையில், நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை வந்ததிலிருந்து வியாபாரிகள் உடனுக்குடன் தொகையை வழங்குவதில்லை கடந்த செப்டம்பர் 30 தேதிக்கு பின் விற்பனை செய்த நெல், உளுந்து போன்ற விளை பொருட்களுக்கு வியாபாரிகள் நிலுவை வைத்துள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் மிகவும் சிரமமாக உள்ளது என்றனர். இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரகண்டநல்லூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். விவசாயிகள் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags : road blockade ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்