×

அமராவதி ஆற்றில் தண்ணீர் நிறுத்தம் நூதன முறையில் சாக்கு பையில் மணல் திருட்டு

காங்கயம், நவ.1:  அமராவதி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து நூதன முறையில் சாக்கு பையில் மணல் கொள்ளையடித்து வருகின்றனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சில வாரங்கள் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவது துவங்கியது. முதலில் மாட்டு வண்டியில் அள்ளப்பட்டு அதை ஆட்டோகளில் ஏற்றி அதை சிலர் காங்கயம், தாராபுரம் பகுதிகளிள் உள்ள திருட்டு மணல் வியாபாரம் செய்யும் லாரி உரிமையாளர்களிடம் விற்று வந்தனர்.  

இந்நிலையில் கடந்த மாதம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்ட சமயத்தில் மணல் எடுத்து செல்ல முடியாமல் ஆங்காங்கு குவித்து வைத்துள்ள மணல் தப்பியது. தற்போது ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளான புதுப்பை, அக்கரப்பாளையம், முலையாம்பூண்டி பகுதிகளில் ஏற்கனவே குவித்து வைத்துள்ள மணலை சமூக விரோதிகள் சிலர் கடத்தி வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் சாக்கு பையில் மணலை கட்டி வைத்து ஆற்றின் கரையோரத்தில் புதர் பகுதியில் மறைத்து வைத்து விடுகின்றனர்.

இதற்காக கிராமப்புறத்தில் உள்ளவர்களை, மணல் மாபியாக்கல் பயன்படுத்தியுள்ளனர். பின்பு இரவு நேரத்தில் ஆட்டோ, டிராக்டர் மூலம் எடுத்து செல்கின்றனர். தற்போத இந்த நூதன முறையில் மணல் கொள்ளை ஜோராக நடைபெற்று வருகிறது.வெள்ளகோவில், ஊதியூர் போலீசார் மாமூல் பெற்றுக்கொண்டு மணல் கொண்டு செல்லும் வாகனத்தை கண்டு கொள்வதில்லை. வருவாய்துறை அதிகாரிகளிள் ஆற்று பகுதியில் ரோந்து செல்வதில்லை, இதற்காக வி.ஏ.ஓ முதல் தாசில்தார் வரை மாமூல் பெற்று கொள்கின்றனர். பெயரளவில் வழக்கு பதிகின்றனர். தொடர்ந்து இது போல் மணல் எடுத்து செல்வதால் கரையோரத்தில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் வறட்சி காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். ஆற்று பகுதியில் சோதனை நடத்தி இயற்கை வளங்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்