×

முறைகேடாக பயன்படுத்தி அதிக புத்தகங்கள் வாங்கி குவிப்பு

சேலம் அக்.22: சேலம் மாவட்ட மைய நூலக நிதியில், வழக்கத்தை விட அதிகமான தொகைக்கு புத்தகங்கள் வாங்கி, நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சேலம் வின்சென்ட் சாலையில், 1953ம் ஆண்டு மாவட்ட மைய நூலகம் திறக்கப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் மைய நூலகம் 1, முழுநேர கிளை நூலகம் 16, கிளை நூலகம்  49, ஊர்ப்புற நூலகம் 78, பகுதி நேர நூலகம் 38, நடமாடும் நூலகம் 1 என 183  நூலகங்கள் செயல்படுகின்றன. மாவட்ட மைய நூலகத்திற்கு  தினமும் மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். நூலகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும், சுமார் ₹1 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு ₹10 லட்சத்திற்கு பருவ இதழ்கள், நாளிதழ்கள் வாங்க அனுமதி உண்டு. ஆனால், 2019 - 2020ம் நிதியாண்டில் செப்டம்பர் 29ம் தேதி வரை மட்டும், சுமார் 23 லட்சத்திற்கு பருவ இதழ்கள், நாளிதழ்கள், புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதனால் நூலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடாக புத்தகங்கள் வாங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நூலக ஊழியர்கள் கூறுகையில், ‘சேலம் மாவட்ட நூலகத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நூலக பாராமரிப்பு பணிகள், புத்தகங்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் வாங்கப்படுகிறது. ஆண்டுக்கு ₹10 லட்சத்திற்கு வாங்க வேண்டிய புத்தகங்களை, கடந்த 9 மாதத்தில் ₹23 லட்சத்திற்கு மேல் வாங்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், பகுதி நேர நூலகம் உள்ளிட்ட நூலகத்திற்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் போகிறது. மேலும், பருவ இதழ்கள் வாங்குவதில், கமிஷன் பெறுவதற்காகவே அதிகாரிகள் அதிகளவு புத்தகங்கள் வாங்கி வருகின்றனர்,’ என்றனர்.


பெண் சாராய வியாபாரி கைது: கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி, தலைவாசல் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி. தீபா கனிகருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் மேற்பார்வையில், எஸ்.ஐ. வீரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சதாசிவபுரம் அருகே வடகுமரை பகுதியில், சிவகாமி(42) என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில், 20 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிவகாமியை போலீசார் கைது செய்தனர்.

வி.சி பிரமுகர் மீது கொலை முயற்சி வழக்கு:  கெங்கவல்லி அருகே காட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடம்பூரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட துணை அமைப்பாளருமான மனோகரன்(37) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அப்பெண்ணின் கணவர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மனோகரன், தனது கூட்டாளிகளான சங்கர், பிரபாகரன், நேசதமிழன் ஆகியோருடன் சென்று, வீடு புகுந்து அப்பெண்ணின் கணவரை சரமாரி தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் நேசதமிழனை கைது செய்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் முருகன்(பொ) வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றி, தலைமறைவான மனோகரன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்.

மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு: அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியில், சேலம் -சென்னை நெடுஞ்சாலையில் நேற்றிரவு மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து, 3 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து சீரடைந்தது. தேன் கூடு அழிப்பு: கெங்கவல்லியில் குடியிருப்பு வளாகத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இதனால், குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்களை அழித்து தேன்கூட்டை அப்புறப்படுத்தினர். இதனால், குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வேளாண் அதிகாரி ஆய்வு: அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளாக தாதம்பட்டி, வலசையூர், அள்ளிக்குட்டையில் பரவலாக சோளம், நெல் மற்றும் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பயிர் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சேத மதிப்பினை வேளாண்மை துணை இயக்குனர் சீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி, தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவலர்களுக்கு பாராட்டு: கெங்கவல்லி பகுதியில் கொரோனா தடுப்பு பணியை எஸ்ஐ முருகேசன் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், காவலர் வீரவணக்க நாளையொட்டி, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, திமுக சார்பில் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் பாபு, சமூக ஆர்வலர் ராம்குமார், செல்வகிளிண்டன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்தனர்.

Tags :
× RELATED பல்வேறு பிறமொழி புத்தகங்களை தமிழில்...