வேலூர், அக்.18: வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 2,685 போலி பயனாளிகளிடமிருந்து ₹1.3 கோடி மீண்டும் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 789 பேர் பணம் செலுத்த மறுத்தால் குற்றவியல் நவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான போலி விவசாயிகள் பதிவு செய்து நிதியுதவி பெற்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கியதில் ₹120 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் போலி விவசாயிகள் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.