×

திண்டிவனத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது

திண்டிவனம், அக்.  2: திண்டிவனம் உட்கோட்ட டிஎஸ்பி கணேசன் தலைமையில் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, செல்வராஜ், தனிப்பிரிவு காவலர் ஆதி உள்ளிட்ட போலீசார் மரக்காணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால்  துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் விழுப்புரம் அடுத்த வளவனூர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் எழில் என்கின்ற எழிலேந்திரன் (38) என தெரியவந்தது. இவர் சென்னையில் கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம்,  குமரன் நகர், காசிமேடு  உள்ளிட்ட 20 இடங்களில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

 மேலும் பண்ருட்டியில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதேபோல் திண்டிவனம் ஜெயபுரம் பகுதியில் ஆளில்லாத இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது . இவர் மீது பல்வேறு பகுதியில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில்  உள்ளன. மேலும் இரண்டு முறை  தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.  பின்னர் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : robberies ,Tindivanam ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...