×

ெகாரோனா ேநாய் பேரிடர் 15 நாட்களுக்கு பிற மாநில பயணம் வேண்டாம்


நெல்லை, மார்ச் 18:  கொரோனா நோய் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால் 15 நாட்களுக்கு வெளியூர் பயணத்தை தவிர்க்குமாறு நெல்லை கலெக்டர் ஷில்பா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது. எனவே பொது மக்கள் நோய் தொற்று ஏற்படாத வகையில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.  பொது மக்கள் பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும், அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கவும். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய் பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

குறிப்பாக வழிபாட்டு தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணக் கூடங்கள், சமூக விழாக்கள், விருந்துகள், நீச்சல் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், கேளிக்கை அரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவும். திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் ஆகியவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும். பொது மக்கள் அனைவரும் தனி நபர் சுகாதாரம் பேண வீட்டிற்குள் நுழையும் பொழுது அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.  அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி கொண்டு தூய்மைபடுத்திக் கொள்ளவும். சளி, இருமல் காய்ச்சல் மற்றும் கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவனையை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவும்.

நெல்லை, தென்காசி மாவட்ட மக்களுக்காக கொரோனா வைரஸ் சம்பந்தமாக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில்  24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இந்த அவசர கால செயல் மையத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் அவசர கால செயல் மைய பணியாளர்கள் ஆகிய பணியாளர்களை கட்டணமில்லாத தொலைபேசி எண்.1077 மற்றும் 0462-2501070 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : states ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்