×

துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 18: துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தின் போது தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி வலியுறுத்தினார். திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணியாளர்கள் நலன் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி தலைமையில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களின் பணிகள் மற்றும் அவரைச் சார்ந்து வாழும் குடும்பத்தினரின் சமூக பொருளதார நிலை, வாழ்வியல் சூழ்நிலை, கல்வி நிலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இதில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிர்மானி பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சார்ந்த உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் என எவையாகினும், குறித்த காலத்துக்குள் தங்கள் கழிவுக்குழிகளை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்ய வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை நடைமுறைப்படுத்துதலை முறையாக கண்காணிக்க மாநகராட்சி கமிஷனர், நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சியின் செயல் அலுவலர்கள் ஆகியோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்களின் நலனில் மிகவும் அக்கறையுடன் இருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என்றார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திஷாமித்தல், மாநகரக் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், வருவாய் அலுவலர் சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : cleaning personnel ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை...