×

நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை பணியாளர்களை தேர்வு செய்ய திட்டம் வார்டுகளில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை

நாகர்கோவில், டிச.27 : துப்புரவு பணிகளை தீவிரப்படுத்த நாகர்கோவில் மாநகராட்சிக்கு மேலும் 104 தூய்மை பணியாளர்களை தேர்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ள 611 தூய்மை பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது பணியாற்றி வரும் 173 நிரந்தர தூய்மை பணியாளர்கள் வடிகால்கள் சுத்தப்படுத்தும் பணிகள், சாலையோர தூய்மை பணி, மாற்று பணிகள், சந்தை துப்புரவு பணி, பஸ் ஸ்டாண்ட் துப்புரவு பணி, அலுவலக சுத்தப்படுத்தல், பூங்கா சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

தற்போது வார்டு ஒன்றுக்கு வடிகால் சுத்தப்படுத்துதல், சாலையோர தூய்மை பணி ஆகியவற்றுக்கு ஒரு நபர் வீதம் பணியமர்த்தப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வார்டு ஒன்றுக்கு ஒரு பணியாளர் ஒதுக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 மாத காலமாக மாமன்ற கூட்டத்திலும் மற்றும் மன்ற உறுப்பினர்களால் தூய்மை பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் வார்டுகளில் முழுமையான அளவில் தூய்மை பணி நடைபெறவில்லை என்று புகார்கள் கூறப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் சொந்த தேவைக்காக விடுப்பு எடுக்கும்போது சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதனால் நாகர்கோவில், மாநகராட்சியில் முழு அளவிலான சுகாதார பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.

மேலும் இந்த சூழ்நிலையில் இந்த மாதம் ஒரு தூய்மை பணியாளரும், 2024ல் 9 பேரும், 2025ல் 8 பேரும், 2026ல் 11 பேரும் ஓய்வு பெற உள்ளனர். எனவே இந்த நிலைகளை கருத்தில் கொண்டு சுகாதார பணியின் முக்கியத்துவம் கருதி வடிகால் சுத்தப்படுத்துதல், சாலையோர துப்புரவு பணி ஆகியவற்றுக்கு சிஎல்சி குழு மூலம் தற்காலிகமாக வார்டுக்கு கூடுதலாக 2 நபர்கள் வீதம் 104 தூய்மை பணியாளர்களை பணியமர்த்தி கொள்ளவும், அதற்காக ஒரு தூய்மை பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.507 வீதம் 104 தூய்மை பணியாளர்களுக்கும் ஜனவரி முதல் ஜூன் 2024 வரை 6 மாதங்களுக்கு பொதுநிதியில் இருந்து தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி நடைபெறுகின்ற நகர்மன்ற கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

The post நாகர்கோவில் மாநகராட்சிக்கு 104 தூய்மை பணியாளர்களை தேர்வு செய்ய திட்டம் வார்டுகளில் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagarco ,NAGARGO, ,MUNICIPALITY OF NAGARCO ,of Nagarko ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...