×

தொழிலகங்களில் கொரோனா வைரஸ் தடுக்க சைமா சங்கம் அறிவுரை

திருப்பூர், மார்ச் 18: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் வைகிங் ஈஸ்வரன் கூறியுள்ளதாவது: ஒவ்வொருவரின் சுய சுத்தம் மிகவும் அவசியமானது. நிறுவனத்தில் பணி துவங்குமுன், சோப் தண்ணீரில் கைகளை சுத்தமாக கழுவுதல் அவசியம். நிறுவனத்தில் வருகை பதிவிற்காக உள்ள கைரேகையை பதிவு செய்யும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். எல்லோரும் பயன்படுத்தும் கைபிடிகளை (கதவு, மாடிபடி கைபிடிகள், கார், பஸ் கைப்பிடிகள்) அடிக்கடி டெட்டால் ஊற்றி தூய்மையாக வைப்பது நல்லது.

தும்மும்போதும், இருமும்போதும் தவறாமல் கைகுட்டையால் முகத்தை மூடுவது சரியானது. வேலை முடித்து வீட்டிற்குள் செல்லும் போதும் கை, கால்களை தண்ணீரால் கழுவி செல்வது நலம். அணிந்துள்ள உடைகளையும் தினசரி துவைத்து மாற்றிக் கொள்வது பழக்கமாக வேண்டும். சற்று உடல் நலம் குன்றினாலும் தயங்காது மருத்துவரை அணுகவும். அடிப்படையில்லாத தவறான வததந்திகளை வலை தளத்தில்  பதிய கூடாது. கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு போகாமல் தவிர்ப்பது நல்லது. கூட்டம் கூடும் விசேஷ சமயங்களில் கோயில் செல்வதை தவிர்க்கலாம். மேற்கண்ட முன் எச்சரிக்கைகளை சரியாக கடைபிடித்தால் பொது சுகாதரத்தோடு நாடும், வீடும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Saima Association ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்