×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள், சினிமா தியேட்டர்கள் மூடல்

தேனி, மார்ச் 17: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள், சினிமா திரையரங்குள் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் இத்தகைய பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் அண்டைய தமிழக மாவட்டங்களான தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டும், சினிமா திரையரங்களை வருகிற 31ம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைகை அணை பூங்கா கதவுகள் மூடப்பட்டு கொரோன வைரஸ் தொற்று பரவலைத் தவிர்க்க பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரின் அறிவிப்பு நோட்டீஸ் பூங்கா நுழைவுவாயிலில் உள்ள கதவுகளில் ஒட்டப்பட்டது. இதனையடுத்து, வைகை அணையில் உள்ள வடகரை, தென்கரைகளில் உள்ள சிறுவர் பூங்கா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அணை திறந்த நாளில் இருந்து தற்போதே முதல் முறையாக ஒரு தொற்று நோய்க்காக அணை பூங்கா மூடப்பட்டதாக இப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவி செல்லும் வழியில் வனத்துறை நுழைவு வாயிலும் பூட்டப்பட்டது. சுருளி அருவி, சின்னச்சுருளி அருவியிலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.தேனியில் உள்ள சினிமா திரையரங்களை மூடி. சினிமா காட்சிகள் ரத்து என அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்த குழந்தைகளை பள்ளி துவங்கியதும், விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் அறிவித்து மாணவ, மாணவியர்களை வீடுகளுக்கு அனுப்பினர். அரசு உத்தரவு வந்ததும் பள்ளிகளுக்கு கல்வித் துறை நிர்வாக அலுவலகத்தில் இருந்து முறையாக பள்ளிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் தேவையில்லாமல் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பின்னர், பள்ளிகளில் இருந்து கூட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டது.

Tags : closure ,tourist attractions ,district ,movie theaters ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...