×

இடுக்கி மாவட்டத்தில் அதிகரிக்கும் வெப்ப அலை; 1,051 ஹெக்டேர் பரப்பளவு ஏலக்காய் செடிகள் கருகியது

கம்பம், ஏப். 25: உலகத்திலேயே அதிகளவில் ஏலக்காய் விவசாயம் நடப்பது கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் தான்.இங்கு விளையக்கூடிய ஏலக்காய் வளைகுடா மற்றும் ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இடுக்கி மாவட்டத்தில் உள்ள 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 70 ஆயிரம் தமிழக கேரள விவசாயிகளால் ஏலக்காய் பயிரிடப்படுகிறது.குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் மாலி, அன்னியார் தொழு, கருவாக்குளம், வண்டன்மேடு, பாதத்தோடு, ராஜகுமாரி, போடிமெட்டு, சாந்தம்பாறை மற்றும் மூணாறு ஆகிய பகுதிகளில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது.

40 நாட்களுக்கு ஒரு முறை ஏலச்செடியில் இருந்து ஏலக்காய் விளைச்சலுக்கு தயாராகி விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு விற்பனைக்கு வரும் ஏலக்காயை உலகளவில் வாணிபம் செய்ய மத்திய அரசால் ஸ்பைசஸ் போர்டு இடுக்கி மாவட்டம் புத்தடியிலும்,தேனி மாவட்டம் போடியிலும் உள்ளது.காலை மாலை என நாளொன்றுக்கு 2 முறை இங்கு ஏலம் விடப்படுகிறது. சராசரியாக இங்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் கிலோ ஏலக்காய் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்திலிருந்து விருதுநகர் வியாபாரிகள் போடியிலும்,கேரளா வியாபாரிகள் அடிமாலி, நெடுங்கண்டம்,குமுளி வியாபாரிகள் புத்தடியிலும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள்.

வாரத்தில் 12 முறை ஏலம் நடக்கும்.இங்கு நிர்ணயம் செய்யப்படும் விலை தான் உலகெங்கும் விற்கப்படுகிறது. கேரளாவையொட்டி தமிழகத்தின் தேனி மாவட்டம் இருப்பதால் இடுக்கியில் விளையக்கூடிய ஏலக்காய்க்கு தமிழக விவசாயிகள் பாதிக்கும் மேற்பட்டோர் தமிழகத்தை ஒட்டி உள்ள கருவாக்குளம், நெடுங்கண்டம், பாறத்தோடு, வண்டன்மேடு மற்றும் அன்னியார்தொழு போன்ற பகுதிகளில் ஏல விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருவதால் ஏலக்காய் ஆக்ஷனில் ஏலம் மந்தமாக இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வரலாறு காணாத அளவில் அதிக வெப்பநிலை உள்ளதாலும், மழை இல்லாததாலும் ஏலச் செடிகள் கருகும் நிலையில் மேலும் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1051 ஹெக்டர் பரப்பளவில் ஏல செடிகள் கருகி அழிந்துள்ளதாக ஏலத்தோட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பிப்.18ம் தேதி முதல் ஏப்.18ம் தேதி வரை உள்ள 2 மாதங்களில் ஏலத் தோட்டங்கள் பெருமளவில் அழிந்து விட்டதாகவும், உற்பத்தி குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் ஏலக்காயின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.2471க்கு விற்பனையான ஏலக்காயின் விலை நேற்று நடைபெற்ற ஆக்ஷனில் ரூ.3009க்கு விற்பனையானது. சராசரி தரம் உள்ள ஏலக்காயின் விலை கடந்த வாரம் ரூ.1776ல் இருந்து இந்த வாரம் ரூ.1925க்கு உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச விலையாக ரூ.1500க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் ஏலக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.538 கூடியுள்ளது.

The post இடுக்கி மாவட்டத்தில் அதிகரிக்கும் வெப்ப அலை; 1,051 ஹெக்டேர் பரப்பளவு ஏலக்காய் செடிகள் கருகியது appeared first on Dinakaran.

Tags : wave ,Idukki district ,Kampham ,Kerala ,Gulf ,Asian ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு