×

ஆத்தூர் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ மின்கம்பியில் உரசியதால் விபத்து

ஆத்தூர், மார்ச் 13: தஞ்சாவூரில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்த டாரஸ் லாரி, ஆத்தூர் அருகே மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகேயுள்ள மல்லியகரை கருத்தராசாபாளையம் பகுதியில் உள்ள ராசிபுரம்  சாலையில் மதியம் 1.30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, சேலம் மாவட்டம்  தாரமங்கலம் பகுதிக்கு கால்நடை தீவனமான வைக்கோல் லோடு ஏற்றிய டராஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை  தாரமங்கலத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக்(30) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி  ஆத்தூர் அடுத்த மல்லியக்கரை கருத்தராசாபாளையம் பகுதியில் வந்த போது, சாலையின் குறுக்கே சென்ற  மின்கம்பியில் வைக்கோல் பாரம் உரசியது. இதனால் மின்கம்பிகள் ஒன்றுடன் உரசி தீப்பொறி லாரியில் இருந்த வைக்கோல் மீது விழுந்து தீ பிடித்துக்கொண்டனர்.

இதனை பார்த்த லாரி டிரைவர் கார்த்திக், உடனடியாக லாரியை சாலையின் அருகே இருந்த விவசாய நிலத்திற்கு  செல்லும் பாதைக்கு ஓட்டிச்சென்று நிறுத்தினார். மேலும் லாரியில் தீப்பிடித்து விட்டது என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தண்ணீர் மற்றும் மண்ணை கொட்டி வைக்கோலில்  பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, தீ மேலும் பரவாமல் இருக்க லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளை அகற்றி, அருகில் இருந்த விளை நிலத்தில்  கொட்டினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதுகுறித்து ஆத்தூர் மற்றும்  வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 2 லாரிகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த  தண்ணீர் பற்றாததால், உடனடியாக அருகில் இருந்து விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை பிடித்து வந்து, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை  அணைத்தனர்.இந்த தீவிபத்தில் லாரியின் பின்பகுதியும், வைக்கோலும் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வைக்கோல் ஏற்றி  வந்த லாரி தீ பிடித்து எரிந்த தகவல் அறிந்தவுடன் மல்லியகரை ஊராட்சி மன்ற   தலைவரின் கணவர் ஜோதி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Accident ,Attur ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...