×

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரையிலான சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்

நெய்வேலி, மார்ச் 12: விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன.
மேலும் என்எல்சி நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இச்சாலை வழியாக என்எல்சி நிறுவனத்திற்கு செல்கிறது.
தற்போது விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல்கள் எழவில்லை என்றாலும்  சாலை அமைப்பதற்காக பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் நடைபெறுகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு என்எல்சி நிர்வாகம் தங்கள் ஏரியில் சேமிப்பு வைத்திருந்த சாம்பல் கழிவுகளை இலவசமாக சாலை பணிக்காக சிறப்பு அனுமதி பெற்று வழங்கி வருகிறது.

இந்த சாம்பலை நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வந்து தினமும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள பள்ளங்களில் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் உள்ளிட்டவை நடைபெற்று வந்தாலும், இதில் கருங்கல் ஜல்லி,  கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலை நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் இதுவரை நடைபெறவில்லை.தற்போது சாலை பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். தற்போது இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி தினந்தோறும் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Road ,Vikravandi-Thanjavur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...