×

கிருஷ்ணகிரியில் கோடைக்கு முன்பே வறண்ட நீர்நிலைகள்

கிருஷ்ணகிரி, மார்ச் 12:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடைக்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு வருகிறது. இந்நிலையில், இரை தேடி ஏராளமான பறவைகள் குவிய தொடங்கியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்றி என ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின. மழையால் 10 ஆண்டுகள் வறண்டு கிடந்த ஏரிகளில் கூட தண்ணீர் தேங்கி நின்றது. கடந்தாண்டு ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பினர் கிருஷ்ணகிரி நகரை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்தனர். இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால், தேவசமுத்திரம் ஏரி, புதூர் ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான பகுதியில் வெயில் அளவு 100 டிகிரியை தொட்டுள்ளதால், ஏரி, குளம், குட்டைகளில் உள்ள தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து,  அவதானப்பட்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க முடியாததால், அந்த ஏரியும் வேகமாக வறண்டு வருகிறது. இந்நிலையில், அவதானப்பட்டி ஏரி, ஆத்துகால்வாய் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு பிளம்மிங்கோ, நத்தைக்கொத்தி, நாரைகள், நீர்வாத்து, நீர்க்கோழி, நீர் காகம், உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த பறவைகள் ஏரியில் உள்ள சிறுமீன்கள், நத்தைகள், பூச்சி, புழுக்களை இரையாக்கி, ஏரிகளில் அருகில் உள்ள மரங்களில் தங்குகிறது. இதனிடையே, இந்த பறவைகளை சமூக விரோதிகள் சிலர் வேட்டையாட முயன்று வருகின்றனர். எனவே, கிருஷ்ணகிரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் மற்றும் அரிய வகை பறவைகளை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்