×

மண்டைக்காடுபகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜைதிரளான பக்தர்கள் பங்கேற்பு

குளச்சல், மார்ச் 11: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நேற்று இரவு ஒடுக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குமரி  மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன்  கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை  வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடை விழா கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன்   தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்தது. மாசிக்கொடையின் முக்கிய  வழிபாடான மகா பூஜை எனப்படும்  வலியபடுக்கை பூஜை கடந்த வெள்ளிக்கிழமை  நள்ளிரவு நடந்தது.
9ம் நாள் விழாவை  முன்னிட்டு நேற்று முன்தினம்   இரவு 9.30 மணிக்கு  மற்றொரு முக்கிய வழிபாடான  பெரிய சக்கர தீவெட்டி  அலங்காரத்துடன் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல்  நிகழ்ச்சி   நடந்தது.

 10ம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு  சாஸ்தான் கோயிலிலிருந்து யானை மீது களபம் மற்றும் புனித நீர் கொண்டு  வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 4.30 முதல் 5  மணி வரை அடியந்திர பூஜை, 6 மணி முதல் குத்தியோட்டம் ஆகியவை நடந்தது. 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8  மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை, நள்ளிரவு 12 மணியளவில் ஒடுக்கு பூஜை பவனி  நடந்தது. ஒடுக்கு பவனி சாஸ்தான் கோயிலிலிருந்து பகவதியம்மன் கோயில் வரை  நடந்தது.  கோயில் பூசாரிகள் உணவு  பதார்த்தங்களை 13 பானைகளில் சுமந்து  வாயில் துணிகட்டி கோயிலுக்கு கொண்டு வந்தனர். இதனை கோயிலின் 4  புறமும் திரளான பக்தர்கள் தரையில் அமர்ந்து அமைதியுடன் தரிசித்தனர். 1  மணிக்குள் ஒடுக்கு பூஜையுடன் கொடை நிறைவடைந்தது.

இதையடுத்து எட்டாம் கொடை  வரும் 17ம் தேதியிலும்,மீனப்பரணி கொடை 27ம் தேதி அன்றும் நடக்கிறது.10ம்  நாள் கொடையை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அளிக்கப்பட்டிருந்தது. இதனால்  காலை முதலே குமரி மாவட்ட பக்தர்கள் பெருமளவில்  மண்டைக்காட்டில்  குவிந்தனர். அவர்கள் பொங்கலிட்டு  அம்மனை  வழிபட்டனர். சிலர் அருகில் உள்ள தோப்புக்களிலும் கூட்டம் கூட்டமாக   பொங்கலிட்டனர். பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் பொங்கலிடும் பகுதி,கோயில்   பிரகார வளாகம், மண்டைக்காடு சந்திப்பு, கடற்கரை ஆகிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு மற்றும்   கேரளாவிலிருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.  பிற்பகல் 2 மணி   முதல் மாலை 6 மணி வரை கடந்த பிளஸ் 2 தேர்வில் 450ம், அதற்கு மேலும்   மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு தேர்வில் 400ம், அதற்கு   மேல் மதிப்பண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு இந்து சேவா சங்கம் சார்பில்   பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : place ,Mandakkadapagavatyamman ,devotees ,
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...