×

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ₹2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பறிமுதல் தொழிற்சாலைக்கும் சீல் வைப்பு

வேலூர், மார்ச்11: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ₹2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கும் அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் செந்தில்குமாருக்கு வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கம்பெனி இயங்கி வருவதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுசூழல் பொறியாளர் கலைச்செல்வி மற்றும் வேலூர் தாசில்தார் சரவணமுத்து, பிடிஓ அமுதவள்ளி ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அப்துல்லாபுரம் கிராமத்தில் செம்பேடு சாலையில் இருந்த தொழிற்சாலையை சோதனையிட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருவது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த இர்பானுக்கு சொந்தமான தொழிற்சாலை என்று தெரிவந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருவது தெரியவந்தது. ேமலும் இவர் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சப்ளை செய்துவந்தது தெரிந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த ₹2லட்சம் மதிப்பிலான 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொழிற்சாலையில் கட்டிங், மிக்சிங், ரீசைக்கிளிங் உட்பட ₹5லட்சம் மதிப்புள்ள இயந்திரங்களுடன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களை இர்பான் எங்கிருந்து வாங்கினார். இந்த தொழிற்சாலை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு ஏதேனும் லஞ்சம் கொடுத்து இத்தனை நாட்களாக ரகசியமாக இயக்கி வந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Sealing ,factory ,Vellore ,Abdullapuram ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...