×

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

விழுப்புரம், மார்ச் 6: விழுப்புரத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அளவீடு செய்யும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.
நாடுமுழுவதும் உள்ள ரயில்வே இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர், இரும்புவேலிகள் போட்டு பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அதன்படி, விழுப்புரத்தில் தெற்கு ரயில்வேக்கு சொந்தமான மிகப்பெரிய இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர். விழுப்புரம் கீழ்பெரும்
பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து விழுப்புரம் மாதா கோயில் வரை ரயில்வேக்கு  சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை அளவீடு செய்து சுற்றிலும் மதில்சுவர் எழுப்புவதற்காக நேற்று ரயில்வே துறையின் நிலஅளவைப்பிரிவு அதிகாரிகள் கல்லூரி சாலைக்கு வந்தனர்.

அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, ரயில்வேக்குச் சொந்தமான இடத்தை அளவீடு செய்து மதில் சுவர் எழுப்புவதற்காக கல்லூரி சாலையில் இருந்து கண்ணகி தெரு சந்திக்கும் இடத்தில் பள்ளம் தோண்டினர். இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து ரயில்வே அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் எம்.பி. லட்சுமணன், ரயில்வே துறையிடம் முறையாக அனுமதி பெற்று அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் இங்கு தார் சாலை போடப்பட்டது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் ஒவ்வொரு வீட்டின் முன்புற பகுதியையும் அடைத்தாற்போல் ரயில்வே நிர்வாகம் மதில் சுவர் எழுப்பினால் நாங்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல் கா.குப்பம், எருமனந்தாங்கல், கீழ்பெரும்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சென்று வர பிரதான சாலையாக கல்லூரி சாலை திகழ்கிறது. இப்படியிருக்கும்பட்சத்தில் கண்ணகி தெருவும், கல்லூரி சாலையும் சந்திக்கும் இடத்தையும் அடைத்து மதில்சுவர் கட்டப்பட்டால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். எனவே இப்பகுதியில் மதில் சுவர் கட்டக்கூடாது என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ரயில்வே அதிகாரிகள் கூறிவிட்டு சென்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை