×

விவசாய சங்கங்கள் மேற்பார்வையில் பாசன வாய்க்கால் புனரமைப்பு திட்ட பணிகளை நடத்த வேண்டும்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 6: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி கோப்பாடி மதகு அருகில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறையில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு நீர், நிலவள திட்டம் பகுதி இரண்டின் மூலம் கீழ் கொள்ளிடம் உப வடிநில பகுதி சிப்பம்-3 அமைப்பதற்கு ரூ.76 கோடியே 83 லட்சம் செலவில் பூமி பூஜை நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் ரவி மனோகர் தலைமை தாங்கினார். சிதம்பரம் செயற்பொறியாளர் சாம்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் எம்எல்ஏ, சிதம்பரம் பாண்டியன் எம்எல்ஏ  ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்தனர்.

கீழணை உதவி செயற்பொறியாளர் அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள் பார்த்திபன், முத்துக்குமார், வெற்றிவேல், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதன் மூலம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் மற்றும் புவனகிரி ஆகிய நான்கு வட்டங்களில் செல்லும் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், வடவாறு பாசன வாய்க்கால்கள், கஞ்சன்கொல்லை வாய்க்கால்கள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் புனரமைக்கப்பட உள்ளது.இதனால் 75 கிராமங்களை சேர்ந்த 46 ஆயிரத்து 250 ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும் என கூறப்படுகிறது. இதில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டத்திலுள்ள வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு பாசன வாய்க்கால்களில் தூர்வாருதல், தடுப்புச் சுவர்கள் ஆகியவைகளை புனரமைத்து நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ள இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், புனரமைப்பு பணிகள் 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : Agricultural Associations ,
× RELATED பேபி அணையின் நீர்மட்டத்தை152அடியாக உயர்த்த விவசாய சங்கம் கோரிக்கை..!!