×

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மக்கள் துணை போகக்கூடாது

கூடலூர், மார்ச் 5:  கூடலூர் அருகே உள்ள ஓவேலி காந்திநகர் மக்கள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் காந்திநகர் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காந்திநகர் மக்கள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுகுமாரன், துணைத்தலைவர் புஸ்பராஜ், செயலாளர் சத்தியசீலன், துணை செயலாளர்  நாகேந்திரன், பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் ஜென்ம நில பிரச்னையை தமிழக அரசு மூன்று பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் எம்பவர் கமிட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய ஆக்கிரமிப்பு பற்றிய அறிக்கை பெற்று வருகிறது. அதனடிப்படையில் தமிழக அரசு இறுதி தீர்வை மேற்கொள்ள உள்ளது. அதுவரையில் புதிய ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது. பொது மக்களும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகக்கூடாது. இந்த நிலை தொடர்ந்தால் மட்டுமே ஜென்ம நில பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து மக்களுக்கான நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும்’’ என்றார். தொடர்ந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி தீர்வுக்கான விண்ணப்பங்களை துறைவாரியாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும் 13  பேருக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார்,  வட்டாட்சியர் சங்கீதராணி,  டிஎஸ்பி ஜெய்சிங், மாவட்ட அரசு கூட்டுறவு அச்சக தலைவர் பத்மநாதன், ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் மற்றும்  வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், பழங்குடி மக்கள் என 500 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சங்க ஆலோசகர் ஆனந்தராஜா வரவேற்றார். முடிவில் சங்க நிர்வாகி ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags : occupants ,
× RELATED மதுராந்தகம் அருகே ஓட்டுநரின்...