திருவள்ளூர்: திருவள்ளூரில் வெயில் வாட்டி வதைப்பதால் தள்ளுவண்டிகளில் ‘பழ ஜூஸ்’ மற்றும் ‘கூழ்’’ விற்பனை அதிகரித்துள்ளது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் மிக அதிகமாக இருக்கும். அந்த காலத்தில் தான் அக்கினி நட்சத்திர வெயில் காலமும் வரும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தட்பவெப்பநிலை மாற்றத்தால் எல்லாம் தலைகீழாகி கொண்டிருக்கிறது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்வதில்லை. குளிர்காலத்தில் வெயில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் தட்வெப்பநிலை மாறியுள்ளது. ஏதாவது புயல் சின்னம் உருவானால் தான் மழை பெய்யும் என்கிற நிலையில் பருவமழையும் பொய்த்துவிட்டன. இது, ஒருபுறம் இருந்து கொண்டிருக்கிற நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது முன் கூட்டியே மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் காலம் துவங்கி விட்டது என்று சொல்லும் அளவிற்கு திருவள்ளூரில் வெயில் வாட்ட துவங்கியுள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் வெயில் மாலை 4 மணி தாண்டியும் விடுவதாக இல்லை என்பது போல் அடித்து கொண்டிருக்கிறது.
இன்னும் அக்கினி நட்சத்திர வெயில் வருவதற்கு பல நாட்கள் உள்ள நிலையில் அட்வான்சாக அக்கினி வெயிலை விட அதிகமான வெயில் தற்போது திருவள்ளூரில் அடித்து வருவது மக்களை கடும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் குடிநீர் தேவையும் அதிகரித்துவிட்டன.வெயிலுக்கு இதமாக இயற்கை பானங்களாக கருதப்படும் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், கரும்பு ஜூஸ், பழ ஜூஸ், நீர் மோர், இளநீர், தர்பூசணி போன்றவையும் தற்போது வழக்கமான விற்பனையை விட அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூர் நகரில் ஆங்காங்கே சாலையோரம் அனைத்து ஊறுகாய் வகைகளுடன், கருவாடு ஆகியவற்றுடன் கூழ் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. நீண்ட தூரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இது போன்ற கடைகளில் நின்று கூழ் குடித்து உடலை குளிர்ச்சியாக்கி கொள்கின்றனர். இதற்கிடையில் மின் தட்டுப்பாடு பிரச்னை வேறு இருந்து கொண்டிருக்கிற நிலையில், வெயில் காலத்தை எப்படி கழிப்பது? என்று புரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.