×

திருநாவலூரில் விவசாயிகள் தினமும் அலைக்கழிப்பு

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 5: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருநாவலூர் கிராமம். இந்த கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிக அளவு நெல் பயிரிட்டு வருகின்றனர். இந்த  விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மூட்டைகள்  பிடித்து உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட  பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வண்டிகள் மூலம் எடுத்து சென்று  விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் திருநாவலூர் பகுதிக்கு வரும் தனியார்  நெல் கொள்முதலீட்டாளர்களிடம் குறைந்த விலைக்கு நெல் விற்பனை செய்து  வந்தனர். இதனால் திருநாவலூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த  விவசாயிகள் பாதிப்பு அடைவதை தடுக்க திருநாவலூர் கிராமத்தில் நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல்  நிலையம் திறக்கப்பட்டது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம்  திறக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் ஏராளமான விவசாயிகள் தங்களது நெல்லை  விற்பனைக்கு எடுத்து வந்தாலும், இதுவரையில் விற்பனைக்கு மூட்டை பிடிக்காத  நிலையே ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், விவசாயிகளின் நீண்ட நாள்  கோரிக்கையான இந்த நேரடி நெல்கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டதில் இருந்து  இதுவரையில் நெல் மூட்டை பிடித்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படவில்லை.  இதனால் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நெல் களத்திலேயே உள்ளது. மேலும் 75 கிலோ கொண்ட மூட்டை பிடிப்பதற்கு பதிலாக 40 கிலோ கொண்ட நெல் மூட்டைகள் மட்டுமே பிடிக்க முடியும் என்றும், அதற்கு கூலியாக ரூ40 கொடுக்க வேண்டும் என கூறப்படுவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுத்து நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும், நெல் மூட்டை  போடும் தொழிலாளிகளுக்கும் பாதிப்பின்றி தீர்வு காண வேண்டும். மேலும் தடையின்றி நெல் கொள்முதல்  செய்ய றடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  மேலும் திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள  கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து உடனடியாக அதற்குரிய  பணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thirunalloor ,
× RELATED திருநல்லூரில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி