×

கோபியில் ரூ.8 கோடியே 60 லட்சம் செலவில் பாதாள மின்கேபிள் திட்டம் 90 % நிறைவு

ஈரோடு, மார்ச் 5: கோபியில் பாதாள மின்கேபிள் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதையடுத்து 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மின் இழப்பை குறைக்கவும், விபத்துக்களை குறைக்கவும் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பாதாள மின்கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே செயல்படுத்த முடிவு செய்திருந்த இத்திட்டம் முக்கிய நகராட்சி, பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.161 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், கோபி நகராட்சி பகுதியில் ரூ.8 கோடியே 60 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. உயர்மின் அழுத்த பாதை மற்றும் தாழ்மின் அழுத்த பாதை என கோபி நகராட்சி பகுதியில் மொத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள மின்கேபிள் அமைக்கப்படுகிறது. இதுதவிர, 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் கேபிள்கள் அமைக்கப்பட உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சர்வீஸ் கேபிள் அமைக்கும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. மீதமுள்ள 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. 2 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,`கோபி நகர பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள பாதாள மின்கேபிள் திட்டப்பணியில் உயர்அழுத்த, தாழ்வழுத்த கேபிள்கள் அமைக்கும் பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு சர்வீஸ் பெட்டிகள் வைக்கப்பட்டுவிட்டது. இனி சர்வீஸ் கேபிள் பொருத்தும் பணி மட்டுமே மீதம் உள்ளது. இப்பணிகளும் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு விடும். அதன்பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.

Tags : Kobe ,
× RELATED கோபியில் சூறாவளியுடன் கனமழை; 3 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்