×

அரவை மில்களில் ‘பாக்கெட்’ இட்லி, தோசை மாவாக மாறும் ரேஷன் அரிசி

கோவை, மார்ச் 5: கோவை நகர், புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து இட்லி, தோசை மாவு பாக்கெட் தயாரித்து தள்ளுவண்டி கடைகளுக்கு சப்ளை செய்வது பரவலாகி விட்டது. கோவை மாவட்டத்தில்தான் ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடக்கிறது. கோவை மார்க்கமாக கேரள மாநிலத்திற்கு லாரி, டெம்போ, வேன், ரயில், இரு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துகிறார்கள். மதுக்கரை, எட்டிமடை, கந்தே கவுண்டன் சாவடி வழியாக தலை சுமையாகவும் சிலர் ரேஷன் அரிசி கடத்தி வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டிய உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரெய்டு நடத்தாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
வாணிப கழக குடோன், ரேஷன் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசி கோவை நகர், புறநகரில் உள்ள சில அரவை மில்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் அரிசி என கண்டறிய முடியாத அளவிற்கு பாலீஸ் போட்டு அரைக்கின்றனர். சில அரவை மில்களில் ரேஷன் அரிசியை மாவாக மாற்றி இட்லி, தோசை பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். அரிசி மாவை முறுக்கு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். மாதந்தோறும் சுமார் 100 டன்னிற்கும் அதிகமான ரேஷன் அரிசி அரவை மில்களில் அரைக்கப்பட்டு மூட்டைகளாக பேக்கிங் செய்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களில் இருந்து அரிசி பெறப்படுவதுபோல் குறிப்பிட்டு அரிசியை கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள்.

நிறம் மாறி பாலீஸ் போட்டு புதிய அரிசி போல் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் அரிசியை பாலீஸ் போட்டு அரைக்கும் மில்களில் இருந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கணிசமான அளவு மாமூல் தொகை வழங்கப்படுகிறது. அரவை மில்களில் ரேஷன் அரிசியை அரைக்க, பாலீஸ் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர், ரகசியமாக ரேஷன் அரிசியை அரைப்பதற்காகவே சிறிய அளவில் அரவை மில்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. முறைகேடாக ரேஷன் அரிசியை பாலீஸ் போட்டு அரைக்கும் மில்களில் சோதனை நடத்தினால் பல டன் எடையில் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ய முடியும். ஆனால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நகர், புறநகரில் அரிசி கடத்தல் தொடர்பாக எந்த சோதனையும் நடத்தாமல், கடத்தல் வாகனங்களை அனுப்பி வைத்து வேடிக்கை பார்க்கும் அவலம் நீடிக்கிறது.ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ெபாதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED மளிகை கடையில் திருட்டு