×

10 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வந்த அண்ணனூர் ரயில்வே மேம்பால பணி செப்டம்பரில் முடியும்: அதிகாரிகள் தகவல்

ஆவடி: ஆவடி  அடுத்த அண்ணனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறு விறுப்பாக நடக்கிறது. இப்பணிகள் வரும் செப்டம்பரில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை சுற்றி திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மூன்று நகர், ஜோதி நகர், சிவசக்தி நகர், ஜெ.பி.எஸ்டேட், சோழன்நகர், ஸ்ரீசக்திநகர், பல்லவன் நகர், வைஷ்ணவி நகர், ரெட்டிபாளையம், கோணாம்பேடு உள்ளிட்ட பல நகரங்கள் உள்ளன.

மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அண்ணனூர் ரயில்வே கேட்டை கடந்து தான் அயப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றபோது, ரயிலில் அடிப்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து, இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையேற்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து திருமுல்லைவாயல் - அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.15.6 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2006ம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது. 2012ம் ஆண்டு ரயில்வே தண்டவாள பகுதியில் மேம்பால பணியும் முடிவடைந்துவிட்டது. பின்னர், மாநில அரசு செய்ய வேண்டிய மேம்பாலப் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த பணிகளை விரைந்து தொடங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் பலமுறை மனு அளித்தனர். அதன்பேரில், கிடப்பில் போடப்பட்ட அண்ணனூர் மேம்பால பணிகள் குறித்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும், பணிகளை முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.27 கோடி கூடுதல் நிதியும், நிலம் கையெடுப்பு பணிக்கு ரூ.25 கோடி நிதியும் என ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டு செப்டம்பரில் மேம்பாலப்பணிக்கு டெண்டர் விடப்பட்டது. மேலும், இப்பணிகளுக்காக நில கையெடுப்பு, மேம்பால மறு வடிவமைப்பு பணிகளால் காலதாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் மீண்டும் தொடங்கியது. இப்பணிகள் வருகின்ற செப்டம்பரில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரு புறமும் 650 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 35 ஓடுதளங்கள் கொண்டவையாகும். இதில், தற்போது வரை 24 ஓடுதளங்களின் பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 11 ஓடு தளங்களின் பணிகள் நடைபெற இருக்கிறது. இப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தமேம்பால பணிகள் முடிந்து செப்டம்பரில் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இதன் மூலம், திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியடையும்,’’ என்றனர்.

Tags : Annanur ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை