×

கள்ளக்குறிச்சியில் கந்து வட்டி தொழில் படுஜோர்

கள்ளக்குறிச்சி, மார்ச் 4:   கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி, மளிகை கடை, பூக்கடை, பழக்கடை, தேங்காய் கடை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடை வியாபாரிகளிடம் கந்துவட்டி கும்பல் தினமும் கூடுதல் வட்டிக்கு பணம் வசூல் செய்து வருவதாக வியாபாரிகள் பகீரங்கமாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அதாவது தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் காலையில் ரூ.1000 பணம் கொடுத்தால் அன்று மாலையில் வட்டியுடன் ரூ.1100 ரூபாய் வசூல் செய்கின்றனர். ஒரு வியாபாரிக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5000ம் வரை கடன் கொடுக்கின்றனர். இந்த வட்டியானது மாத கணக்கில் பார்க்கின்ற போது 30 ரூபாய் வட்டியாகும். வட்டிக்கு வாங்கிய வியாபாரிகள் அன்று மாலைக்குள் கந்து வட்டியுடன் கூடிய தொகையை செலுத்தவில்லை என்றால் கந்துவட்டி கும்பல் வியாபாரிகளை அநாகரீகமாக திட்டுவதும் பொருட்களை எடுத்து சென்று விடுவோம் என மிரட்டும் செயல்களிலும் ஈடுபடுவதாக அப்பகுதி வியாபாரிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த தினசரி காய்கறி மார்க்கெட்டில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட கந்துவட்டி முதலாளிகள் பணம் கொடுத்து அதிகமான வட்டிக்கு பணம் சம்பாதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுமட்டும் அல்லாமல் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சாலையோரம் உள்ள தள்ளுவண்டி பழக்கடை, உழவர்சந்தை காய்கறி வியாபாரிகள், மீன் மார்க்கெட், சலூன் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடை வியாபாரிகளிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட கந்து வட்டி முதலாளிகள் தினமும் வந்து பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது ரூ.10 ஆயிரம் பணம் கடன் கேட்டால் ரூ.1000 ரூபாய் முதல் நாளிலேயே வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.9000 மட்டும் பணம் கொடுப்பார்கள். அதனை 100 நாட்களுக்கு தினமும் ரூ.100 என கந்து வட்டிக்காரர்களிடம் செலுத்த வேண்டும். அதிகப்படியான தொகையாக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினால் முதல்நாள் வட்டியாக ரூ.5 ஆயிரம் எடுத்து கொண்டு 45 ஆயிரத்தை வியாபாரிகளுக்கு கந்து வட்டிக்காரர்கள் கொடுப்பார்கள். இதையடுத்து 100 நாட்களுக்குள் இக்கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும். அதாவது தினமும் ரூ.500 வீதம் வட்டியுடன் அசல் தொகையும் சேர்த்து கடன் வசூல் செய்து வருகின்றனர். இந்த வட்டியானது 3 ரூபாய் ஆகும். வியாபாரம் செய்வதற்கு அதிக வட்டி என்று கூட பார்க்காமல் கந்து வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதில் சில வியாபாரிகள் அதிக கடன் சுமையால் குடியிருந்து வரும் வீட்டை குறைந்த விலைக்கு விற்பது அல்லது கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

முறையான அரசு அனுமதி பெறாமல் கள்ளக்குறிச்சி நகரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் பைனான்ஸ் என்ற பெயரில் கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அரசு, அனுமதி பெறாமல் பைனான்ஸ் நடத்தி வரும் கந்து வட்டி கும்பல் யார்? என்பதை ரகசியமாக கண்டறிந்து கந்து வட்டி தொழிலில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, காய்கறி உள்ளிட்ட சிறு வியாபார தொழில் செய்து வரும் மக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கியில் கடன் வழங்கிட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை