×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 58 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைப்பு

விழுப்புரம், மார்ச் 4: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சிய 58 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர். இத்தனை ஆண்டுகாலமாக கோடிகளை குவித்த முதலாளிகளுக்கு, அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் என எல்லா இடங்களிலும் மினரல் வாட்டர் எனப்படும் கேன் குடிநீர்கள் ஏகபோக பயன்பாட்டில் உள்ளது. கடந்த பத்து, இருபது வருடங்களாக மக்களும் இதை குடித்து பழகி விட்டனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி அதை சுத்திகரித்து விலைக்கு விற்பதை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு பேரிடியாக அமைந்தது. தமிழகத்தில் ‘மினரல் வாட்டர்’ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மினரல் பாட்டில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்காக வணிக நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்கள் மட்டுமின்றி நீர்வள ஆதாரமுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ராட்சத மோட்டாரை பொருத்தி நிலத்தடிநீரை உறிஞ்சி கேன்வாட்டர் விற்பனையை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மழைபொய்த்து வறட்சியான நிலையில், இதுபோன்று நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் நிலத்தடி நீர் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பல இடங்களில் விதிகளுக்கு புறம்பாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதாக அரசுக்கு புகார்கள் சென்றன. சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், இதில் 568 குடிநீர் உற்பத்தி நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்று செயல்படுவதும், மற்ற நிறுவனங்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் செயல்படுவதும் தெரியவந்துள்ளது. இதனால் சட்ட விரோதமாக செயல்படும் ஆலைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் பூட்டி சீல்வைத்து வருகின்றனர். குறிப்பாக தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகள் ஓடும், நீர்வளமிக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 58 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

விழுப்புரம் வருவாய்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் மட்டும் 27 ஆலைகளுக்கும், மற்றபடி திண்டிவனம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகள் என மொத்தம் 36 ஆலைகளுக்கு பூட்டி சீல்வைத்துள்ளனர். இதில், அதிகப்படியாக வானூர் தாலுகாவில் 8 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 ஆலைகளை பூட்டி சீல்வைத்துள்ளனர். தொடர்ந்து, சீல்வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளில் உற்பத்தி நடக்கிறதா? என்றும் கண்காணிக்கப்பட்டு வருவதாக விழுப்புரம் வருவாய்கோட்டாட்சியர் ராஜேந்திரன் தெரிவித்தார். விவசாயிகள் நிறைந்த ஒருங்கிணைந்த இம்மாவட்டத்தில், நிலத்தடிநீரையே நம்பி மூன்றுபோகம் சாகுபடிகள் நடந்துவந்தன.

ஆனால் அந்த வளத்தை அழிக்கும் வகையில், மறைமுகமாக இத்தனை ஆண்டுகள் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சி, ஆலை முதலாளிகள் பலகோடிகளை குவித்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு துறை அதிகாரிகள் சிலரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.ஒரேநேரத்தில் 58 ஆலைகள் மூடப்பட்ட நிலையில், கேன் குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதனை முறைப்படுத்தியும், விதிகளை பின்பற்றி ஆலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென மற்றொருபுறம் கோரிக்கை எழுந்துள்ளது. நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேன்வாட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைஉயர்ந்துள்ளது. மேலும், வாட்டர் பாட்டில் விலையும் ரூ.5 வரை உயர்ந்துள்ளது.

Tags : drinking water plants ,Villupuram ,Districts ,Kallakurichi ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...