×

வடநாட்டு ஆசாமிகளின் புகைப்படங்கள் வெளியிட்ட போலீசார் பொதுமக்கள் தகவல் அளிக்க போலீசார் வேண்டுகோள் காட்பாடி மற்றும் வேலூரில் செல்போன் கடைகளில் திருடிய

வேலூர், மார்ச் 2: வேலூர், காட்பாடியில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ₹32 லட்சம் மதிப்பு செல்போன் மற்றும் ₹1.40 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிய வடநாட்டு ஆசாமிகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவப்படங்களை வௌியிட்டு அவர்களை தேடி வரும் போலீசார், அவர்களை பிடிப்பதில் பொதுமக்களும் தகவல் அளிக்க கேட்டுக் கொண்டுள்ளனர். காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் செல்போன் கடையின் திறப்பு விழா நடந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். தொடர்ந்து மறுநாள் காலை கடை உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விலை உயர்ந்த செல்போன்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

அதேபோல் வேலூர் ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை எதிரிலும், எல்ஐசி அலுவலகம் அருகிலும் என இரண்டு கடைகளில் அடுத்தடுத்து நுழைந்த மர்ம கும்பல் தனியார் மருத்துவமனை எதிரில் இருந்த செல்போன் கடையில் இருந்த செல்போன்களையும், எல்ஐசி அலுவலகம் அருகில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ₹1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றது. இரண்டு கடைகளில் மட்டும் மொத்தம் 150 செல்போன்கள் திருட்டு போயிருந்தது.
திருட்டு போன செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு ₹32 லட்சம் ஆகும். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் குறித்து காட்பாடி மற்றும் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மேலும் கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் காட்பாடியில் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் செல்போன்களை திருடி சென்றிருப்பது பதிவாகியிருந்தது. இப்பதிவுகளை வைத்து விசாரணை செய்த போது செல்போன் கடைகளிலும், எலக்ட்ரானிக்ஸ் கடையிலும் கைவரிசை காட்டியது வடமாநில கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. இப்புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ள போலீசார் புகைப்படங்களில் காணப்படும் ஆசாமிகளை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது நேரில் கண்டாலோ அல்லது தங்கள் பகுதியில் நடமாடும் சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து தெரிந்தாலோ வேலூர், காட்பாடி டிஎஸ்பிக்களுக்கோ அல்லது வேலூர் வடக்கு, காட்பாடி இன்ஸ்பெக்டர்களுக்கோ தகவல் தெரிவிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : North Assam ,public ,Katpadi ,Vellore ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...