சென்னை, மார்ச் 1: இந்தியாவில் ஓஎல்எக்ஸ் மூலம் லட்சக்கணக்கான நபர்களை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த முக்கியமான 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
பர்மில் குமார் என்பவர், ஓஎல்எக்ஸ் விற்பனை தளத்தில் மோட்டார் சைக்கிள், கார் போன்றவை விற்பனைக்கு உள்ளதாக தகவல் வெளியிட்டு தமது செல்போன் எண்ணையும் அதில் அளித்திருந்தார். இதை பார்த்து சென்னை மாங்காட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் வாட்ஸ் அப்பில் ராணுவ உடையில் இருப்பது போன்ற படத்தையும் பர்மில் குமார் அனுப்பி உள்ளார். தனது நண்பர் பல்லாவரம் ராணுவ முகாமில் அதிகாரி என்றும், அவர் காஷ்மீருக்கு பணி மாறுதல் ஆகி செல்வதால் பைக்கை விற்பதாக கூறியுள்ளார். மேலும் பைக்கிற்கு ₹60 ஆயிரத்துக்கு பேசி முடித்த பர்மில் குமார் ஆன்லைனில் ₹ 5 ஆயிரம் அனுப்பினால் தான், அடுத்த விவரங்கள் கூற முடியும் என கூறியுள்ளார். இதை நம்பிய இளைஞர் அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த இளைஞர் பணத்தை தருவதை நிறுத்தி விட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது போன்று பல புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்டது.அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் இந்த கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மோசடி செய்த கும்பலை தேடி மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீரன் பட பாணியில் ஒரு வாரம் முகாமிட்டு கிராமத்திலிருந்து முக்கியமான இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.